தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது......080519 புதன் மறைக்கல்வியுரையின்போது......080519 

மறைக்கல்வியுரை – இரு புனிதர்களின் பாதையில் திருப்பயணம்

பல்கேரியாவில் புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் எடுத்துக்காட்டும், வட மாசிடோனியாவில் புனித அன்னை தெரசாவின் ஆன்மீக இருப்பும், இப்பயணத்தின்போது துணை வந்தன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரைக்குச் செவிமடுக்க வந்திருந்த திருப்பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் என, மக்கள் கூட்டம் வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தை நிறைத்திருக்க, முதலில், புனித லூக்கா நற்செய்தி, பிரிவு 12லிருந்து, இறைத்தந்தையின் பராமரிப்பு குறித்த ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்……… உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும். நீங்கள் அவருடைய ஆட்சியை நாடுங்கள்; அப்பொழுது இவை உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார் (லூக், 12, 22.30-32).

அதன் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் அண்மையில் நிறைவேற்றிய மூன்று நாள் திருத்தூதுப் பயணம் குறித்து தன் எண்ணங்களை மக்களோடு பகிர்ந்து கொண்டார்.

அன்பு சகோதரர், சகோதரிகளே,  பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, நேற்று மாலை வத்திக்கான் திரும்பினேன். எனக்கு தாராளமனதுடன்கூடிய வரவேற்பை வழங்கிய இவ்விரு நாடுகளின் அரசு அதிகாரிகளுக்கும், கிறிஸ்தவ சமூகங்களுக்கும் என் இதயம் நிறை நன்றியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறேன். பல்கேரியாவில் புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் எடுத்துக்காட்டின் வழிகாட்டுதலுடன், உடன்பிறந்த உணர்வின் பாதையில் நடக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை Neofit அவர்களையும், பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் ஆயர் மாமன்றத்தையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியசின் பீடத்தின் முன்னர் சிறிது நேரம் செபித்தேன். இவ்விரு உடன்பிறப்பு புனிதர்களும், நற்செய்தி அறிவித்தல் பணியில் தங்கள் கலாச்சாரத்தை எவ்விதம் படைப்பாற்றல் திறனுடன் பயன்படுத்துவது என்பதை அறிந்திருந்தனர். இன்றும் இதேபோன்று பேரார்வமுடன் மறைப்பணியாற்றும் சீடர்கள் தேவை. இறுதியாக, நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடையாளங்களாக, சிறார் கைவிளக்குகளை ஏந்தி வர,  பல்வேறு மதப் பிரதிநிதிகள் இணைந்து, அமைதி எனும் கொடைக்காக இறைவனை நோக்கி வேண்டினோம்.

வட மாசிடோனியா திருத்தூதுப் பயணம்

கல்கத்தாவின் அன்னை தெரசாவின் ஆன்மீக இருப்பு, வட மாசிடோனியா திருத்தூதுப் பயணத்தின்போது எனக்குத் துணை வந்தது. வட மாசிடோனியா திருஅவையின் சாயலை, இந்த சிறிய உருவமுடைய, அதேவேளை, வலிமை நிறைந்தவராகச் செயல்பட்ட அன்னை தெரசாவிடம் நம்மால் காண முடியும். இங்குள்ள திருஅவை மிகச் சிறியதாக இருந்தாலும், அண்டி வருவோருக்கு இளைப்பாறுதலை வழங்கும் வரவேற்பின் இல்லமாகச் செயல்படுகிறது. வட மாசிடோனியாவில் நான் நிறைவேற்றிய திருப்பலிக்குப்பின், அருள்பணியாளர்களையும், துறவறத்தாரையும், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின், மதங்களின் இளையோரையும் சந்தித்து, இறைவனின் குரலுக்குச் செவிமடுக்குமாறு ஊக்கமளித்தேன். பல்கேரியா, மற்றும், வட மாசிடோனியா நாடுகளை சந்திப்பதற்கு இறைவன் வழங்கிய வாய்ப்புக்காக அவருக்கு நன்றி கூறும் அதேவேளையில், அன்புடன்கூடிய இறைபராமரிப்பில் அந்நாட்டு மக்களை ஒப்படைப்போம்.

இவ்வாறு தன் அண்மை திருத்தூதுப் பயணம் குறித்து தன் புதன் மறைக்கல்வியுரையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள் சுரண்டப்படுவதையும், அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதையும் எதிர்த்துப் போராடும், Meter கழகத்தின் அங்கத்தினர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையில் பங்கேற்பதைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இக்கழகம், குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உழைத்து வருகிறது. இறுதியில், இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், நைஜீரியா, கென்யா, தென்னாப்ரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து இம்மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2019, 12:33