Skopje புனித அன்னை தெரேசா நினைவிடம்
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
கல்கத்தா அன்னை தெரேசாவாகப் போற்றப்படும், Anjezë Gonxhe Bojaxhiu அவர்கள், 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, Skopjeல் பிறந்தபோது, அந்த நகர், ஒட்டமான் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. இவர் பிறந்த மறுநாளே, இயேசுவின் தூய இதய ஆலயத்தில் திருநீராட்டப்பட்டார். தற்போது Skopjeல் அன்னை தேரேசா நினைவிடம் இருக்கும் இடத்திலே இயேசுவின் தூய இதய ஆலயம் இருந்தது. இந்த ஆலயம், 1963ம் ஆண்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் சேதமடைந்தது. எனவே அந்த இடத்தில், Skopje நகர நிர்வாகம், புனித அன்னை தெரேசா நினைவிடத்தை எழுப்பியுள்ளது. இந்த இடத்தை ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பார்வையிடுகின்றனர். இந்த நினைவிடத்திற்கு, மே 7, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 10.20 மணியளவில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அன்னை தெரேசா சபை அருள்சகோதரிகள் குழுவின் தலைவர் வரவேற்றார். ஒரு சிறுவன் கொடுத்த மலர்களை, புனித அன்னை தெரேசா திருவுருவத்தின் வைத்த திருத்தந்தையை, அச்சபை சகோதரிகள், புனித அன்னை தெரேசா அவர்களின் இரு உறவினர்கள் ஆகியோர், சிற்றாலயத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த ஆலயத்தில், புனித அன்னை தெரேசா அவர்கள் பயன்படுத்திய சில பொருள்கள் மற்றும் அவரின் திருப்பொருளும் இருந்தன. அவ்விடத்தில் சிறிது நேரம் செபித்த திருத்தந்தை, அன்னை தெரேசாவிடம் செபித்தார். பின்னர், அவ்வில்லத்தில் பராமரிக்கப்படும் ஏறத்தாழ நூறு ஏழைகளையும் சந்தித்த திருத்தந்தை, அங்குப் பணியாற்றும் ஒருவர் கூறிய சாட்சியத்தையும் கேட்டறிந்தார். பின்னர், புனித அன்னை தெரேசா புதிய திருத்தலத்திற்கென, அடிக்கல்லையும் அர்ச்சித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித அன்னை தெரேசா அவர்கள், கடவுளன்பிற்கு ஒரு சாட்சியாக விளங்குகிறார் என்று திருத்தந்தை கூறினார்.
புனித அன்னை தெரேசா சபையினரைச் சந்தித்த பின்னர், அங்கிருந்து 800 மீட்டர் தூரத்திலுள்ள மாசிடோனியா வளாகத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாய் உள்ளூர் நேரம், முற்பகல் 11.30 மணிக்கு, இந்திய-இலங்கை நேரம் இச்செவ்வாய் மாலை 5 மணிக்கு, இந்த வளாகத்தில், பாஸ்கா கால மூன்றாம் வார, செவ்வாய் தின திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்