தேடுதல்

Chulalongkorn பல்கலைக்கழகத்தில், கிறிஸ்தவ, பல்சமயத்தவர் சந்திப்பு Chulalongkorn பல்கலைக்கழகத்தில், கிறிஸ்தவ, பல்சமயத்தவர் சந்திப்பு 

Chulalongkorn பல்கலைக்கழகத்தில், கிறிஸ்தவ, பல்சமயத்தவர்

1897ம் ஆண்டில், தாய்லாந்து அரசர் Chulalongkorn அதாவது 5வது இராமா அவர்கள், உரோம் நகர் வந்தபோது, திருத்தந்தை 13ம் லியோ அவர்களைச் சந்தித்தார். கிறிஸ்தவரல்லாத ஒரு நாட்டுத் தலைவர், வத்திக்கானில் வரவேற்கப்பட்டது அதுவே முதன்முறையாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 22, இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 3.20 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாங்காக் Chulalongkorn பல்கலைக்கழகம் சென்றார். அப்பல்கலைக்கழக அரங்கத்தில், பிரிந்த கிறிஸ்தவ சபை மற்றும், பிற மதங்களின் தலைவர்கள் என, 18 பேர் அமர்ந்திருந்தனர். முதலில் இவர்கள் ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இரு மாணவர்கள் திருத்தந்தைக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். Chulalongkorn பல்கலைக்கழகத் தலைவர், பேராசிரியர் முனைவர் Bundit Eur-arporn அவர்களும், தாய்லாந்து ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், பல்சமய உரையாடல் பணிக்குழுத் தலைவரும் வரவேற்புரையாற்றினர்.

பேராசிரியர் Eur-arporn உரை

Chulalongkorn பல்கலைக்கழகம், தாய்லாந்தின் முதல் பல்கலைக்கழகமாகும். இது, 1917ம் ஆண்டில், தாய்லாந்து அரசர் Chulalongkorn பெயரால் உருவாக்கப்பட்டது. இனம், மதம், பாலினம், சமுதாயநிலை, பொருளாதாரப் பின்புலம் போன்ற வேறுபாடுகள் எதுவுமின்றி, எல்லாருக்கும் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசர் இதை எழுப்பினார். திருத்தந்தையே, 1984ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இங்கு வந்தபின்னர், தாங்கள் தாய்லாந்திர்கு வருகை தந்துள்ளீர்கள். உலகிலுள்ள ஏழைகள் மற்றும், நலிந்தவர்கள் மீது பரிவன்பு, படைப்பைப் பாதுகாத்தல்,   அர்த்தமுள்ள பல்சமய உரையாடல், மதங்கள், நாடுகள் மற்றும், கலாச்சாரங்கள் மத்தியில் அமைதியைக் கட்டியெழுப்புதல் போன்ற ஞானமுள்ள தங்களின் வார்த்தைகளைக் கேட்பதற்குக் காத்திருக்கிறோம். இவ்வாறு Bundit Eur-arporn அவர்கள், வரவேற்புரையாற்றினார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உரையாற்றினார். சிக்கலான சவால் நிறைந்த இன்றைய உலகில், ஒத்துழைப்பும், சந்திப்பும், ஒருவரையொருவர் மதித்தலும் தேவைப்படுகின்றன என்று திருத்தந்தை கூறினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2019, 14:36