Hansen நோயால் பாதிக்கப்பட்டோருடன் ஒருமைப்பாடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
Auschwitz நாத்சி வதைப்போர் முகாம் விடுவிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி ஞாயிறு மூவேளை செப உரையின்போது நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாத்சி வதைப்போர் முகாம் போன்ற பெருந்துயர் நிகழ்வுகளின்போது, அது குறித்து பாராமுகமாக இருப்பது எவ்வகையிலும் அனுமதிக்கப்பட முடியாதது என்று கூறியத் திருத்தந்தை, இத்தகைய பெருந்துயர் நிகழ்வுகள் ஒருபோதும் இடம்பெறக்கூடாது என்பது, நம் அனைவரின் செபமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சனவரி இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலகத் தொழுநோயாளர் தினம், இவ்வாண்டு, சனவரி 27ம் தேதி சிறப்பிக்கப்பட்டதையடுத்து, அந்நாளைக் குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹேன்சன் (Hansen) நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருடனும், அவர்களோடு பணிபுரிவோருடனும் ஒருமைப்பாட்டை அறிவித்து செயலாற்றுவோம் எனவும் அழைப்புவிடுத்தார்.
மேலும், தொற்றுக்கிருமிகள் பரவலால் உயிரிழப்புக்களை சந்தித்துவரும் சீனா குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சீனாவில் பரவிவரும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தொற்றுநோய்க்கு பலியானவர்களை இறைவன் தன் அமைதியில் ஏற்றுக்கொள்வாராக, உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை வழங்குவதுடன், இந்நோயை எதிர்த்து சீன சமூகத்தினால் எடுக்கப்பட்டுவரும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவையும் வழங்குவாராக என தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் ஏறக்குறைய 3000த்தை எட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்