Laudato si’ மடலின் ஏழாண்டு பணித்தளத் திட்டம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
2015ம் ஆண்டு தன்னால் வெளியிடப்பட்ட Laudato si’ திருத்தூது மடலின் ஏழாண்டு கால அளவுடைய பணித்தளத் திட்டம் ஒன்றை துவக்கியுள்ள வேளையில், அதற்கு வாழ்த்துத் தெரிவித்து காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 25, செவ்வாயன்று திருத்தந்தை வெளியிட்ட இந்த காணொளிச் செய்தியில், நாமே இவ்வுலகின் அனைத்து வளங்களின் அதிபதிகள் என்ற அகந்தையுடன் இவ்வுலகிற்கு நாம் இழைத்துள்ள காயங்களால் இவ்வுலகம் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலம், நீர், காற்று, என சுற்றுச்சூழலை நாம் எவ்வாறு அழிவுக்குள்ளாக்கியுள்ளோம் என்பதை, தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நமக்குத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது என, தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோரே சுற்றுச்சூழல் அழிவால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், சுற்றுச்சூழல் அழிவுக்கும் நலக்கேடுகளுக்கும் மிகநெருங்கிய தொடர்பு உள்ளது என்பதையும், பெரிய அளவில் அறிய வந்துள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியதொரு சமுதாயத்தை உருவாக்கும் புளிக்காரமாகவும், வறியோரின் குரலுக்குச் செவிமடுப்போராகவும் செயல்படும் மனிதாபிமானம் நிறைந்த ஒரு சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கத்தில், நம் வாழ்க்கை முறைகளை, உலக வளங்கள், மற்றும் மனிதர்களைப் பொருத்தவரையில் நம் அணுகுமுறைகளை, மாற்றவேண்டிய தேவையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
வருங்காலத் தலைமுறைக்குரிய நம் கடமைகளை உணர்ந்தவர்களாக, சுயநலங்களையும், புறக்கணிப்புக்களையும், பொறுப்பற்ற நிலைகளையும் கைவிட்டு, அன்னை பூமி மீது நம் அக்கறையை வெளிப்படுத்தி, இறைவனிடமிருந்து பெற்றுள்ள இந்த தோட்டத்தை அப்படியே அழகுடன் நம் குழந்தைகளிடம் ஒப்படைப்போம் என உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி துவக்கப்பட்ட Laudato si’ ஆண்டு, பல்வேறு நற்பலன்களை தந்துள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதில் பல்வேறு பிரிவினரின் பங்கேற்பை ஊக்குவிக்கும் ஏழாண்டு பணித்தளத் திட்டம் குறித்து எடுத்துரைத்ததுடன், குடும்பங்கள், பங்குத்தளங்கள்-மறைமாவட்டங்கள், கல்வி நிலையங்கள்-பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், வணிகங்கள்-பண்ணைகள், நிறுவனங்கள்-குழுக்கள்-அமைப்புக்கள், துறவு நிறுவனங்கள், என ஏழு பிரிவுகளாகப் பிரித்து, ஏழாண்டு கால அளவில், சுற்றுச்சுழல் புதுப்பித்தலுக்கு பணியாற்றவுள்ள பணித்தளத்திட்டம் துவக்கப்பட்டுள்ளதைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைவரையும் உள்ளடக்கிய, உடன்பிறந்த உணர்வுடன்கூடிய, அமைதியான, நீடித்து நிலைத்த வருங்காலத்தை அமைக்கும் நோக்கத்தில், Laudato si’ திருமடலில் கூறப்பட்டுள்ள ஏழு குறிக்கோள்களை துணையாகக் கொண்டு, இந்த ஏழு ஆண்டுகளும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை நோக்கிய பயணத்தை மேற்கொள்வோம் என, தன் காணொளிச் செய்தியின் இறுதியில் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்