Laudato si' மாநாட்டிற்கு, திருத்தந்தை காணொளிச் செய்தி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
அர்ஜென்டீனா நாட்டில், பல்கலைக்கழகங்களுக்கு இடையே துவங்கவிருக்கும் Laudato si' மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 24, இச்செவ்வயான்று, காணொளி ஒன்றின் வழியாக, தன் நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
இவ்வாண்டு செப்டம்பர் 1 முதல், 4 வரை, பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை வாழ்த்துகிறேன் என்று, இஸ்பானிய மொழியில், இந்தக் காணொளிச் செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கு, சமுதாய அளவில் விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சிகளை, இம்மாநாடு முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
Laudato si' திருமடல், "பசுமை" திருமடல் மட்டுமல்ல, சமுதாயத் திருமடலும் ஆகும் என்றுரைத்துள்ள திருத்தந்தை, இந்த மாநாடு, அத்திருமடலின் இலக்கின் முழுமையையும், அதன் நல்விளைவுகளையும் காண்பதற்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறவிருக்கும் Laudato si' மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, கடவுளின் ஆசீரை இறைஞ்சியதோடு, தனக்காக கடவுளை மன்றாட மறக்கவேண்டாம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தாயகத்திற்கு அனுப்பியுள்ள காணொளியில் பேசியுள்ளார்.
நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதில் நம் அனைவருக்கும் உள்ள கடமையை வலியுறுத்தும், இறைவா உமக்கே புகழ் எனப்படும் Laudato si' திருமடலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி, பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று கையெழுத்திட்டார். பின்னர் அத்திருமடல், அதே ஆண்டு, ஜூன் மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டது. இத்திருமடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்றாவது திருமடலாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்