உலகளாவிய தோழமையின் புதிய வடிவத்தை வளர்க்க..
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
"Laudato si' வாசகர். நம் பொதுவான இல்லப் பராமரிப்புக்காக ஓர் ஒப்பந்தம்" என்ற தலைப்பில், COP26 காலநிலை உச்சி மாநாட்டையொட்டி வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ள மின்னணு நூலுக்கு முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாப்பது குறித்து, ஆறு ஆண்டுகளுக்குமுன் நான் வெளியிட்ட Laudato si’ திருமடல், கத்தோலிக்கத் திருஅவை, கிறிஸ்தவ சபைகள், மதங்களின் குழுமங்கள், அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும், அவற்றையும் கடந்த தளங்களில், நல்தாக்கத்தை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இத்திருமடல் வெளியிடப்பட்டபின்னர், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களோடு இணைந்து, கத்தோலிக்கரும், ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் முதல் நாளில், படைப்பைப் பாதுகாக்கும் உலக இறைவேண்டல் நாளைக் கடைப்பிடிக்குமாறு தான் அழைப்புவிடுத்ததையும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
Laudato si’ திருமடல் வலியுறுத்தியுள்ள முக்கியச் செய்தி, பல்வேறு மத மரபுகள் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கைகள், மற்றும் முக்கிய நடவடிக்கைகளில் பிரதிபலித்துள்ளது குறித்து, அம்மதங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திருத்தந்தை அம்முன்னுரையில் கூறியுள்ளார்.
‘Laudato si' வாசகர்’ என்ற இந்நூலின் தலைப்பு, 2020ம் ஆண்டு மே 24ம் தேதி முதல், 2021ம் ஆண்டு மே 24ம் தேதி வரை சிறப்பிக்கப்பட்டுவரும் ‘Laudato si’ சிறப்பு ஆண்டு நிறைவுக்குப் பொருத்தமாக உள்ளது என்றும், இப்பூமியின் அழுகுரலால் முன்வைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும், சமுதாய நெருக்கடிகளைக் களைய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார்.
இந்நெருக்கடிகளால் சிறாரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைவதற்கு, உலகினரின் திறந்த மனம் அவசியம் எனவும், சிறந்ததொரு வருங்காலத்தை அமைப்பதற்கு ஒன்றுசேர்ந்துசெயல்பட தீர்மானம் எடுப்பதற்கு, இதுவே தகுந்த தருணம் எனவும் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் வலைப்பக்கத்தில், இம்மாதம் 12ம் தேதியிலிருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நூலில், "Laudato si' திருமடல் பற்றி, உலக அளவில் எழுந்துள்ள சிந்தனைகள், ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இத்திருமடல் பற்றி வழங்கியுள்ள சிறப்புக் கருத்துரைகள் போன்றவை இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்