தேடுதல்

COP26 மாநாட்டில் திருத்தந்தையின் செய்தியை வழங்கும் கர்தினால் பரோலின் COP26 மாநாட்டில் திருத்தந்தையின் செய்தியை வழங்கும் கர்தினால் பரோலின் 

COP26 மாநாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பிய செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் - இன்று நம் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள், நாம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச்செல்லும் பூமிக்கோளத்தின் நலனைத் தீர்மானிக்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் பூமிக்கோளத்தையும், காலநிலை மாற்ற நெருக்கடிகளால் மிக அதிக அளவில் துன்புறும் மக்களையும் காப்பதற்கு செயல்பாடுகள் மிக அவசரமாகத் தேவை என்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள ஒரு செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், COP26 மாநாட்டில் வாசித்தளித்தார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், அக்டோபர் 31ம் தேதி முதல், நவம்பர் 12ம் தேதி முடிய நடைபெற்றுவரும் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் திருப்பீடப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகச் சென்றிருக்கும் கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் செய்தியை, நவம்பர் 2, இச்செவ்வாயன்று வாசித்தளித்தார்.

தலைவர்களுக்கு உறுதியான, துணிவான நோக்கம்

காலநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள நெருக்கடிகளைக் களைய தேவையான மனிதவளம், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளங்களை வழங்க, உலகத்தலைவர்களிடையே, உறுதியான, துணிவான நோக்கம் உள்ளதா என்பதைக் காண, உலகச் சமுதாயம் ஆவலோடு காத்திருக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்களின் துணிவுக்கும், உறுதிக்கும், தற்போது நிலவிவரும் கோவிட் பெருந்தொற்று, பெரும் சவால்களை விடுத்துவருகிறது என்று இச்செய்தியில் கூறும் திருத்தந்தை, இந்த பெருந்தொற்றை வென்று, எதிர்கால வாழ்வை வளமாக்க, கடந்தகால தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது மிக முக்கியம் என்று வலியறுத்திக் கூறியுள்ளார்.

ஒருங்கிணைவதைத் தவிர, வேறு வழி நமக்கு இல்லை

பெருந்தொற்றை எதிர்த்துப் போராடவும், சுற்றுச்சூழல் ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், மனிதகுலம், இன்னும் அதிகமாக ஒருங்கிணைந்து உழைப்பதைத் தவிர, வேறு வழி நமக்கு இல்லை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், தன் செய்தியில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

2050ம் ஆண்டுக்குள், கரியமில வாயுவின் வெளிப்பாட்டை, பூஜ்யம் அளவுக்குக் குறைப்பதற்கு, திருப்பீடம் உறுதி எடுத்துள்ளது என்றும், ஒருங்கிணைந்த சூழலியல் குறித்த விழிப்புணர்வை வழங்க, திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும், திருத்தந்தையின் செய்தியை வாசித்த கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

COP26 மாநாட்டு அரங்கத்தில் கர்தினால் பரோலின் உரை
COP26 மாநாட்டு அரங்கத்தில் கர்தினால் பரோலின் உரை

'சுற்றுச்சூழல் கடன்', 'வறிய நாடுகளின் கடன்'

சுற்றுச்சூழல் நெருக்கடிகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்படும் வறியோருக்கு உலக சமுதாயம், 'சுற்றுச்சூழல் கடனை' செலுத்த கடமைப்பட்டுள்ளது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், அத்துடன் தொடர்புள்ள, 'வறிய நாடுகளின் கடன்' குறித்தும் பேசினார்.

காலநிலை மாற்ற நெருக்கடிகளிலிருந்து வறியோரைக் காப்பாற்ற நிதி உதவிகள் செய்ய முன்வரும் செல்வம் மிகுந்த நாடுகள், கோவிட் பெருந்தொற்று, வறிய நாடுகளில் உருவாக்கியுள்ள துன்பங்களை மனதில் கொண்டு, அவர்களது கடன்களை முற்றிலும் இரத்து செய்வது அவசியம் என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில்  சுட்டிக்காட்டினார்.

நல்லதொரு பூமிக்கோளத்தை விட்டுச்செல்ல...

தற்போது நாம் சந்தித்துவரும் காலநிலை மாற்ற நெருக்கடி, நம் வருங்காலத் தலைமுறைகளைத் தாக்கும் என்பதை உணர்ந்தவர்களாய், தற்போது நாம், துணிவான முடிவுகளை, துரிதமாக எடுக்க கடமைப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் வாசித்தளித்த திருத்தந்தையின் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

அண்மைய ஆண்டுகளில், இளைய தலைமுறையினர் காலநிலை மாற்றத்தைக் குறித்தும், பூமிக்கோளத்தைக் காப்பது குறித்தும் காட்டிவரும் அக்கறையைக் குறித்து, தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று நம் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள், நாம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச்செல்லும் பூமிக்கோளத்தின் நலனைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.

தான் நேரடியாக பங்கேற்க ஆவல் இருந்தாலும், வர இயலாதச் சூழலுக்காக தன் செய்தியின் இறுதியில் வருத்தம் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், COP26 மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவரோடும், தான், இறைவேண்டல் வழியே ஒன்றித்திருப்பதாகக் கூறி, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2021, 14:04