தேடுதல்

திருத்தந்தையின் Te Deum திருவழிபாட்டு மறையுரை

வார்த்தை மனுவுருவானர் நம்மிடையே குடிகொண்டார், என்ற உண்மை நிலை நம்மை, அன்னை மரியாவின் பெருமிதமான தனித்துவம் நோக்கி அழைத்துச் செல்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புத்தாண்டு  பிறப்பதற்கு முந்தைய நாளான, அதாவது, 2021ன் இறுதி நாளான வெள்ளி மாலை, உரோம் நகரின் புனித பேதுரு பெருங்காவிலில், கடந்த ஆண்டின் நன்மைத்தனங்களுக்கு இறைவனுக்கு நன்றியுரைக்கும் வண்ணம், Te Deum நன்றி வழிபாடு இடம்பெற்றது.

கர்தினால்கள் அவையின் தலைவர், கர்தினால் Giovanni Battista Re அவர்கள், திருவழிபாட்டை முன்னின்று நடத்த, நாம் எப்போதும் இறைவனில் கொள்ளும் நம்பிக்கையில் தொடர்ந்து வாழவேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் சுருக்கும் இதோ:

இறைவன் மனுவுரு எடுத்த மறையுண்மை நம்மில் ஆச்சரியத்திற்கும் வியத்தகு நிலைக்கும் ஆழ்ந்த தியானத்திற்கும் அழைப்பு விடுக்கின்றது. அன்னை மரியாவும், யோசேப்பும், பெத்லேகேமின் ஆட்டிடையர்களும் அடைந்த ஆச்சரியம் கலந்த வியப்பு, இயேசுவின் பிறப்பு குறித்த மறையுண்மையை நம் இதயத்தில் ஏற்று வியப்படைவதற்கும் தூண்டுதலாக உள்ளது. இந்த வியத்தகு நிகழ்வு, நம் இதயத்தையும் மனதையும் ஆழமாகத் தொடவில்லை எனில், நம் வாழ்விலும் சமூகத்திலும் எத்தகைய மாற்றத்தையும் கொணர முடியாது.

வார்த்தை மனுவுருவானர் நம்மிடையே குடிகொண்டார், என்ற உண்மை நிலை நம்மை, அன்னை மரியாவின்  பெருமிதமான தனித்துவம் நோக்கி அழைத்துச் செல்கிறது. ஏனனில், இந்த உன்னத நிகழ்வின் முதல் சாட்சியே நம் அன்னை மரியாதான். தன்  தாழ்மை உணர்வால் அவர் மிகப்பெரும் சான்றாக மாறுகிறார். நம் கிறிஸ்தவ பெருவியப்பு, வியத்தகு கற்பனை உலகினைச் சார்ந்தது அல்ல. மாறாக, ஓர் மலரின் அழகையும், நாம் சந்திக்கும் பிறரின் வாழ்வுக் கதைகள், ஒரு முதியவரின் முகச் சுருக்கங்கள், புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தையின் சிரித்த முகம் என்ற உண்மை நிலைகளின் மறையுண்மைகளிலிருந்து பிறக்க முடியும். அங்கு மறையுண்மைகள் ஒளிர்விடுகின்றன.

இயேசுவின் பிறப்பு என்னும் வியத்தகு நிகழ்வு, திருஅவையிலும் அன்னை மரியாவிலும் நன்றியுடன் நிரப்பப்பட்டதாக இருந்தது. கடவுள் தன் மக்களைக் கைவிடவில்லை என்பதையும், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவர் நம்முடன் இருக்கிறார் என்பதையும் உணர்த்துவதாக இந்நிகழ்வு இருக்கிறது. இறைக்குழந்தைக்குரிய மாண்பை நமக்குத் பெற்றுத்தர, நம்மை அவர் மீட்டதை இது குறிக்கிறது. கோவிட் பெருந்தொற்று நம்மில் ஒருவித கைவிடப்பட்ட உணர்வை கொண்டுவந்தாலும், நாம் அனைவரும் ஒரே சூழலைத்தான் எதிர்நோக்குகிறோம் என்ற உணர்வு, நம்மில் பொறுப்புணர்வையும், ஒருமைப்பாட்டையும் வளர்த்ததை நம்மால் மறுக்க முடியாது. ஆம், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பது, அதிகம் அதிகமாய் இக்காலத்தில் உணரப்பட்டது.

மறைசாட்சிகளின் இரத்தம் சிந்துதலால் பயனடைந்துள்ள உரோம் நகரின் கலாச்சாரத்திலும், வரலாற்றிலும் ஒருமைப்பாட்டிற்க்கான அழைப்பு எழுதப்பட்டுள்ளதாக காண்கிறோம். இன்றும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆற்றப்பட்டுவரும் பணிகள் பாராட்டுதற்குரியவை .

நம்மை புன்னகையுடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் அன்னை மரியா, நம் இறைவனில் முழுநம்பிக்கை வைத்து, அவரைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

இவ்வாறு, Te Deum நன்றி வழிபாட்டில் தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2022, 10:03