தேடுதல்

இறைவனின் அன்னையிடம் திருத்தந்தை செபம் (சனவரி1, 2022) இறைவனின் அன்னையிடம் திருத்தந்தை செபம் (சனவரி1, 2022) 

திருத்தந்தை: உக்ரைனில் அமைதி நிலவ ஒன்றிணைந்து செபிப்போம்

மார்ச் 25, வருகிற வெள்ளியன்று மனித சமுதாயத்தை, குறிப்பாக, இரஷ்யா மற்றும், உக்ரைனை, மரியாவின் களங்கமற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கின்றேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ ஒன்றிணைந்து கடவுளை இறைஞ்சுவோம் என்று, மார்ச் 22, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

“மரியாவுக்கு இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்ட திருநாளாகிய மார்ச் 25, வருகிற வெள்ளிக்கிழமையன்று மனித சமுதாயத்தை, குறிப்பாக, இரஷ்யா மற்றும், உக்ரைனை மரியாவின் களங்கமற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளேன், இதன் வழியாக, அமைதியின் அரசியாம் அன்னை மரியா, அமைதியைப் பெறுவதற்கு நமக்கு உதவுவார். இந்த அர்ப்பணிப்பு நிகழ்வில், என்னோடு ஒன்றித்திருக்குமாறு அனைத்து குழுமங்கள் மற்றும், நம்பிக்கையாளர்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்” என்ற சொற்களை திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

இந்த அர்ப்பணிப்பு நிகழ்வின்போது, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தான் தங்கியிருக்கும் இல்லத்திலிருந்தே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு ஒன்றிணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

உக்ரைன் குறித்து கர்தினால் மாரியோ கிரெக்

கர்தினால் மாரியோ கிரெக்
கர்தினால் மாரியோ கிரெக்

மேலும், உக்ரைன் நாட்டு எல்லையிலுள்ள போலந்து நாட்டிற்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, உலக ஆயர்கள் மாமன்றத்தின் செயலர் கர்தினால் மாரியோ கிரெக் அவர்கள், உக்ரைன் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ள பெண்கள் மற்றும், சிறார், மனித வர்த்தகர்களின் கரங்களில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புகள் தொடர்பாக, போலந்து சென்றுள்ள கர்தினால் கிரெக் அவர்கள், உக்ரைன் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்லும் இவ்வேளையில், பெண்கள் மற்றும், சிறாருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு, அந்நாடுகளின் அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின் ஏறத்தாழ இருபது இலட்சம் மக்கள் போலந்துக்குச் சென்றுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2022, 12:15