உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
உக்ரைனில் இடம்பெறும் போரால் பாதிக்கப்பட்டு உரோம் நகரின் குழந்தை இயேசு (Bambino Gesu) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சிறார்களை மார்ச் 19, சனிக்கிழமையன்று சென்றுச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போரால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 50 குழந்தைகள் சிகிச்சைக்கென உரோம் நகர் குழந்தை இயேசு மருத்துவமனைக்கு வந்துள்ள நிலையில், 19 பேர் அனுமதிக்கப்பட்டு, மீதியுள்ளோர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் குழந்தைகளையும், ஏனையக் குழந்தைகளையும் அவர்கள் சிகிச்சைப் பெற்றுவரும் அறைகளுக்கேச் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களோடு பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு தன் நன்றியையும் வெளியிட்டார்.
ஏற்கனவே, ஆப்கானிஸ்தான் நாட்டை இரஷ்ய துருப்புக்கள் ஆக்ரமித்த காலத்திலும், யூகோஸ்லாவியா போரின்போதும், ருவாண்டாவில் Tutsi, மற்றும் Hutu இன மக்கள் படுகொலைகளின்போதும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கியுள்ள உரோம் நகர் குழந்தை இயேசு மருத்துவமனை, தற்போது உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறது.
வத்திக்கான் நிதியுதவியுடன் இயங்கிவரும் இம்மருத்துவமனை, இனம், மதம், மொழி, நாடு என்ற எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும், குறிப்பாக, போரால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் மனரீதியான, மற்றும் உடல் ரீதியான சிகிச்சைகளை இலவசமாக வழங்கிவருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்