தேடுதல்

கிருஷ்ணகர் மறைமாவட்ட பேராலயம் கிருஷ்ணகர் மறைமாவட்ட பேராலயம் 

கிருஷ்ணகர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நிர்மல் வின்சென்ட்

2019ம் ஆண்டின் நிலவரப்படி, கிருஷ்ணகர் மறைமாவட்டத்தின் 12,271,407 மக்களில், 64.906 பேர் கத்தோலிக்கர். இவர்கள் இருபது பங்குத்தளங்களில் உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் கிருஷ்ணகர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, சலேசிய சபையின் அருள்பணியாளர் நிர்மல் வின்சென்ட் கோமஸ் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 30, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

டார்ஜிலிங் நகரில் அமைந்துள்ள சலேசிய சபையின் நவதுறவு இல்லத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிவந்த புதிய ஆயர் நிர்மல் வின்சென்ட் அவர்கள், 1959ம் ஆண்டில், கிருஷ்ணகர் மறைமாவட்டத்தின் Ranaghatல் பிறந்தவர்.

சலேசிய சபையில் சேர்ந்து டார்ஜிலிங் நகரில் மெய்யியல் படிப்பை முடித்து, உரோம் நகரில் சலேசிய பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பையும், அறிவியல் கல்வியில் முனைவர் பட்டத்தையும் பெற்ற இவர், 1989ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

சலேசிய சபையில் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ள கிருஷ்ணகரின் புதிய ஆயர் நிர்மல் வின்சென்ட் அவர்கள், 2020ம் ஆண்டிலிருந்து சலேசிய சபையின் நவதுறவு இல்லத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தார்.

கிருஷ்ணகர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் Joseph Suren Gomes அவர்கள், 2019ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 இச்சனிக்கிழமையன்று, அம்மறைமாவட்டத்திற்கு அருள்பணி நிர்மல் வின்சென்ட் கோமஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டின் நிலவரப்படி, கிருஷ்ணகர் மறைமாவட்டத்தின் 12,271,407 மக்களில் 64.906 பேர் கத்தோலிக்கர். இவர்கள் இருபது பங்குத்தளங்களில் உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2022, 16:25