தேடுதல்

திருத்தந்தை: போரில் கிறிஸ்து மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறார்

வன்முறைக்கு நம்மைக் கையளிக்கும்போது, நம் இறைத்தந்தையாம் கடவுள் பற்றியும், நம் சகோதரர், சகோதரிகளாகிய மற்றவர் பற்றியும் எதுவுமே அறியாதிருக்கிறோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இயேசு கிறிஸ்து, சிலுவையில் கொடூரமாய் ஆணிகளால் அறையப்பட்டபோது உரைத்ததுபோன்று, கிறிஸ்தவர்கள் பகைவர்களை மன்னிப்பதற்கு அழைக்கப்படுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஏப்ரல் 10, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் துவங்கிய குருத்தோலை பவனிக்குப்பின், திருப்பாடுகளின் ஞாயிறு திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

வன்முறைக்கு நம்மைக் கையளிக்கும்போது, நம் இறைத்தந்தையாம் கடவுள் பற்றியும்,  நம் சகோதரர், சகோதரிகளாகிய மற்றவர் பற்றியும் எதுவுமே அறியாதிருக்கிறோம்,   என்றுரைத்த திருத்தந்தை, இதனை போரின் அறிவற்றதன்மையில் காண்கிறோம், இப்போரில் கிறிஸ்து மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறார் என்று கூறினார்.

கிறிஸ்து மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறார்

அநீத மரணத்தை எதிர்கொண்ட தங்கள் கணவர்கள் மற்றும், மகன்களுக்காக கண்ணீர் சிந்துகின்ற அன்னையரிலும், குண்டுவீச்சுக்களுக்கு அஞ்சி தங்கள் கரங்களில் பிள்ளைகளை வைத்துக்கொண்டு புலம்பெயரும் மக்களிலும், தனியாக இறப்பதற்கு கைவிடப்பட்ட வயதுமுதிர்ந்தோரிலும், வருங்காலம் புறக்கணிக்கப்பட்ட இளையோரிலும், தங்களின் சகோதரர், சகோதரிகளைக் கொலைசெய்ய அனுப்பப்பட்ட படைவீரர்களிலும் கிறிஸ்து மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

“தந்தையே தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்றுரைத்த இயேசுவின் வியக்கத்தக்க திருச்சொற்களை பலர் கேட்டனர், ஆனால் அவற்றுக்கு எவருமே பதிலுறுக்கவில்லை, ஆனால், இயேசுவுக்கு அருகில் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர் மட்டும் அதற்குப் பதிலளித்தார் எனவும் திருத்தந்தை உரைத்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலுக்குப்பின், இஞ்ஞாயிறன்று, முதல்முறையாக வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், ஏறத்தாழ 65 ஆயிரம் நம்பிக்கையாளர்கள் பங்குபெற்றனர். இத்திருப்பலியில், “தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்ற நற்செய்தியாளர் லூக்கா எழுதிய திருப்பாடுகளின் வரலாறு நற்செய்தி வாசகமாக வாசிக்கப்பட்டது. 

பகைவரை மன்னித்தல்

கைகளும், கால்களும் சிலுவையில் அறையப்பட்டு வேதனையின் உச்சநிலையை அடைந்திருந்த அந்நேரத்தில், தன்னை இந்நிலைக்கு உள்ளாக்கினவர்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று இயேசு ஏன் கூறினார் எனச் சிந்திப்போம் என்றுரைத்த திருத்தந்தை, நாம் நம் செயல்களால் மற்றவருக்குத் துன்பம் இழைக்கும்போது, கடவுளும் துன்புறுகிறார், ஆயினும் அவர் நமக்கு மன்னிப்பு வழங்க விரும்புகிறார் என்று கூறினார்.

இயேசு தம் பகைவர்களை மன்னித்ததன் வழியாக, நாமும் நம் பகைவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்பதைப் போதிக்கிறார் என்றும், ஒப்புரவு அருளடையாளத்தில் கடவுளின் மன்னிப்பை வழங்க, அருள்பணியாளர்கள் ஒருபோதும் சோர்வுறக் கூடாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2022, 12:36