தேடுதல்

திருத்தந்தை, சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் Cassis திருத்தந்தை, சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் Cassis  

திருத்தந்தை, சுவிட்சர்லாந்து அரசுத்தலைவர் Cassis சந்திப்பு

சுவிட்சர்லாந்து நாடு, தன் திருப்பீடத் தூதரகத்தை உரோம் பெருநகருக்கு மாற்றியிருப்பது, நீதி மற்றும், அமைதியை ஊக்குவிப்பதில், திருப்பீடமும், சுவிட்சர்லாந்தும் தங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்க்க உதவும் – கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான்

சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் அரசுத்தலைவர் Ignazio Cassis அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மே 06, இவ்வெள்ளியன்று, ஏறத்தாழ அரை மணி நேரம் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பிற்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார், சுவிட்சர்லாந்து அரசுத்தலைவர் Cassis.

கர்தினால் பரோலின் அவர்கள், சுவிட்சர்லாந்து அரசுத்தலைவர் Cassis அவர்களோடு உரையாடியபோது, இவ்வெள்ளியன்று, பாப்பிறையின் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ அமைப்பில், புதிதாக படைவீரர்கள் பணிப் பிரமாணம் எடுப்பது பற்றிக் குறிப்பிட்டு, அவர்களின் மனத்தாராளமிக்கப் பணிகளைப் பாராட்டினார்.

சுவிட்சர்லாந்து நாடு, தன் திருப்பீடத் தூதரகத்தை உரோம் பெருநகருக்கு மாற்றியிருப்பது,  திருப்பீடமும், சுவிட்சர்லாந்தும் கவனம் செலுத்துகின்ற உலகளாவிய விவகாரங்களில், குறிப்பாக, நீதி மற்றும், அமைதியை ஊக்குவிப்பதில் இவ்விரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வளர்க்க உதவும் என்று, இச்சந்திப்புக்களில் கூறப்பட்டன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ள எதிர்விளைவுகள், குறிப்பாக, மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் அந்நாட்டுப் புலம்பெயர்ந்தோர் குறித்தும் இச்சந்திப்புக்களில் கவனம் செலுத்தப்பட்டன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

பரிசுப்பொருள்கள்

சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் Cassis
சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் Cassis

மேலும், இறைவாக்கினர் எசாயா நூலின் 32ம் பிரிவில் குறிக்கப்பட்டுள்ள “பாலைவனம் சோலையாகும்” என்ற சொற்கள் பதிக்கப்பட்ட வெண்கலப் பதக்கம் ஒன்றையும், 2022ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தி, அனைவரும் உடன்பிறந்தோர் திருமடல் உட்பட, தான் வெளியிட்ட பல ஏடுகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவிட்சர்லாந்து அரசுத்தலைவர் Ignazio Cassis அவர்களுக்கு அளித்தார். Cassis அவர்களும், Bourbaki Panoramaவைச் சித்தரிக்கும் அழகிய படத்தை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

Bourbaki Panorama

1870ம் ஆண்டு முதல், 1871ம் ஆண்டுவரை பிரான்ஸ் நாட்டிற்கும், புருசியாவுக்கும் இடையே இடம்பெற்ற போரில், Belfort நகரைக் கைப்பற்றும் மோதலில், பிரெஞ்சு தளபதி Charles-Denis Bourbaki தோல்வியடைந்து சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்தார். Bourbaki Panorama என்பது, பிரெஞ்சு இராணுவத்தின் தடுப்புக்காவலை சித்தரிக்கும் படமாகும்.

தூதரக உறவுகள்

1586ம் ஆண்டு முதல் வத்திக்கானுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே நிலவிவந்த உறவுகள், 1873ம் ஆண்டு தடைப்பட்டன. பின்னர், இவ்விரு நாடுகளுக்கும் இடையே, 1920ம் ஆண்டில் இத்தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

அல்பேனிய முஸ்லிம் உயர்குரு

அல்பேனிய முஸ்லிம் உயர்குரு
அல்பேனிய முஸ்லிம் உயர்குரு

மேலும், அல்பேனியா நாட்டின் முஸ்லிம் உயர்குரு Haxhi Bujar Spahiu அவர்களும்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மே 06, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2022, 15:49