தேடுதல்

Mercedarian துறவு சபையினருக்கு  திருத்தந்தை உரையாற்றுகிறார் Mercedarian துறவு சபையினருக்கு திருத்தந்தை உரையாற்றுகிறார் 

திருத்தந்தை: பணியில் கடவுளின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும்

Mercedarian துறவு சபை உருவாக்கப்பட்ட காலத்தைவிட இக்காலத்தில் அதிக அடிமைகள் உள்ளனர் என்று நிச்சயமாக நாம் கூறலாம், இந்த அடிமைகளுக்குப் பணியாற்றுவதே அச்சபையினரின் சவாலாக உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

பெருநகரங்கள் அழைக்கப்படும் உரோம், இலண்டன், பாரிஸ் போன்ற இடங்களில்கூட அடிமைமுறைகள் இடம்பெற்றுவரும்வேளை, அம்முறைகள் இடம்பெறும் இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றால் துன்புறும் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணி என்ன என்று, ஆண்டவரிடம் கேளுங்கள் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் அன்னை மரியா துறவு சபையினரிடம் கூறினார்.

கருணையின் அன்னை மரியா சபையின் பொதுப் பேரவையில் பங்குபெறும் 35 பிரதிநிதிகளை, மே 07, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பேரவையின் தலைப்பான “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவா.2.5) என்று, கானாவூர் திருமணத்தில் பணியாளர்களுக்கு அன்னை மரியா கூறிய சொற்களை மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கினார்.

சிறைப்பட்ட கிறிஸ்தவர்களின் விடுதலைக்கென உருவாக்கப்பட்ட Mercedarian துறவு சபையினருக்கு இஸ்பானிய மொழியில் தன் எண்ணங்களை எடுத்துரைத்த திருத்தந்தை,    

இச்சபை உருவாக்கப்பட்ட காலத்தைவிட இக்காலத்தில் அதிக அடிமைகள் உள்ளனர் என்று நாம் நிச்சயமாக கூறலாம், இந்த அடிமைகளுக்குப் பணியாற்றுவதே உங்களின் சவாலாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இக்காலத்தில் புதிய முறைகளில் அடிமைப்படுத்தப்படுவது வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளன, ஆனால் அவை ஏராளம் என்றுரைத்த திருத்தந்தை, புவியியல், நிறம் போன்றவற்றை மாற்றும் அம்முறைகளும் இக்காலத்தில் நிலவுகின்றன, ஆனால், உண்மையாகவே நிலவும் அடிமைமுறை அதிகமதிமாக உருவாக்கப்பட்டு வருகிறது என்ற கவலையையும் வெளிப்படுத்தினார்.

மரியாவைப் போன்று இயேசுவின் சிலுவையடியில் நின்று, ஏழைகள் மற்றும், சிறைப்பட்டோரின் துன்பங்களில் எவ்வாறு பங்குகொள்வது என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இக்கால அடிமைகளைத் தேடிச்செல்லுங்கள், எனக்காகச் செபிக்க மறவாதீர்கள் என்று, Mercedarian துறவு சபையினரிடம் கேட்டுக்கொண்டார்.

கருணையின் அன்னை மரியா சபை

கருணையின் அன்னை மரியா சபை 1218ம் ஆண்டில், "பீட்டர் நொலாஸ்கோ" என்பவரால் உருவாக்கப்பட்டது. இச்சபை உருவாக்கப்பட புனிதர் ரேமண்டும் ஒரு கருவியாக செயல்பட்டார். புனித பீட்டர் நொலாஸ்கோ தலைமையில் தொடங்கப்பட்ட Mercedarian துறவு சபையினர் 1218ம் ஆண்டுக்கும் 1632ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 4,90,736 அடிமைகளை மீட்டனர். அடிமையாக இருந்த புனித வின்சென்ட் தெ பவுல், 1642ம் ஆண்டுக்கும் 1660ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சம் பவுண்டு வெள்ளிக்கு 1,200 கிறிஸ்தவ அடிமைகளை மீட்டார். இச்சபையின் இருபால் துறவிகள் பொதுவாக, Mercedarians என அழைக்கப்படுகின்றனர். இச்சபையினர் தொடக்க முதல், இன்று வரை, நான்காவது வார்த்தைப்பாடு ஒன்றை எடுக்கின்றனர். விசுவாசத்தை இழக்கும் ஆபத்தில் இருக்கும்வேளையில், மற்றவர்க்காக, தேவையானால் உயிரையும் கொடுக்கத் தயார் என இச்சபையினர் வார்த்தைப்பாடு கொடுக்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2022, 17:19