திருத்தந்தை பிரான்சிஸ், Gibraltar முதன்மை அமைச்சர் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஜூன் 06, இத்திங்கள் காலையில், Gibraltar முதன்மை அமைச்சர் Fabian Picardo அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியபின்னர், தன் குடும்பத்தினரையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
ஜிப்ரால்டர், இஸ்பெயின் நாட்டின் தெற்கே, மத்தியதரைக் கடற்கையில் அமைந்துள்ள பகுதியாகும். பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்ட இப்பகுதி, பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது. அப்பகுதியில் தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின்படி, இஸ்பெயின் இப்பகுதியின் ஆட்சியைக் கோருகிறது. எனினும் ஜிப்ரால்டர் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இஸ்பெயினுக்கு ஆட்சி மாறுவதையோ, அல்லது இஸ்பெயினுடன் இணை ஆட்சி இடம்பெறுவதையோ விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
அல்பேனியாவின் நாடாளுமன்றத் தலைவர்
மேலும், அல்பேனியா நாட்டின் நாடாளுமன்றத் தலைவர் Lindita Nikolla அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்றும் திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
திருவிழிப்பு வழிபாட்டிற்கு காணொளிச் செய்தி
இன்னும், CHARIS எனப்படும், உலகளாவிய அருங்கொடை இயக்கத்தினர் ஜூன் 4 இச்சனிக்கிழமை இரவில் இணையதளம் வழியாக நடத்திய திருவிழிப்பு வழிபாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
தூய ஆவியார், போர் மற்றும், காழ்ப்புணர்வு நிறைந்த ஓர் உலகில் அமைதி நிலவ உதவுபவர், வாழ்வை மாற்றவல்லவர் மற்றும், நம் அன்றாடச் செயல்கள் வழியாக அன்பைப் பேணிக்காப்பவர் என்பதை கிறிஸ்தவர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
CHARIS இயக்கம், பெந்தக்கோஸ்து பெருவிழாவை முன்னிட்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் ஒத்துழைப்போடு இந்த இணையவழி திருவிழிப்பு செப வழிபாட்டை ஏற்பாடு செய்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்