தேடுதல்

கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் இளம் அருள்பணியாளர்கள், துறவிகளின் பிரதிநிதிகள் குழு கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் இளம் அருள்பணியாளர்கள், துறவிகளின் பிரதிநிதிகள் குழு  

திருத்தந்தை: திருஅவை, ஒரே ஊர்தியில் பயணிக்கும் சகோதரர்கள் குழு

கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் இளம் அருள்பணியாளர்கள் மற்றும், துறவிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்றை, திருப்பீடத்தில் சந்தித்து தூய ஆவியார் பெருவிழா வலியுறுத்தும் முக்கிய கருத்துக்கள் பற்றி திருத்தந்தை எடுத்துரைத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை, ஜூன் 5 வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கும் மிகப்பெரும் பெந்தக்கோஸ்து பெருவிழா, கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே முழு ஒன்றிப்புக்கு அழைப்புவிடுக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.

ஜூன் 03, இவ்வெள்ளியன்று கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் இளம் அருள்பணியாளர்கள் மற்றும், துறவிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்றை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தூய ஆவியார் பெருவிழா வலியுறுத்தும் முக்கிய கருத்துக்கள் பற்றி எடுத்துரைத்தார்.

ஒன்றிப்பு, தூய ஆவியாரின் பணி

ஒன்றிப்பு, ஒரு கொடை, அது மேலிருந்து வருகின்ற ஒரு நெருப்பு என்றும், இந்த ஒன்றிப்பை நம் முயற்சிகள் மற்றும், உடன்பாடுகளால் அடையமுடியாது, மாறாக இதற்கு, தூய ஆவியாரின் பணிக்கு நம்பிக்கையோடு நம் இதயங்களைத் திறந்து வைக்கவேண்டும், அவ்வாறு செய்வதால் முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில் அவர் நம்மை வழிநடத்த முடியும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

நல்லிணக்கம்

ஒன்றிப்பு என்பது நல்லிணக்கம் எனவும் பெந்தக்கோஸ்து பெருவிழா நமக்குக் கற்பிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இது, தூய ஆவியார் வழங்கும் வரங்களின் பன்மைத்தன்மையில் உள்ளது என்றும், ஆவியாரின் வழியே நல்லிணக்கம்தான் என்றும் கூறியுள்ளார்.

முன்னோக்கிச் செல்தல்

ஒன்றிப்பு, ஒரு பயணம் எனவும் பெந்தக்கோஸ்து பெருவிழா நமக்குக் கற்பிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, ஒன்றிப்பு, தூய ஆவியார் எனும் புதிய சக்தியோடு முன்னோக்கி நடப்பதாகும் என்றும், திருஅவையானது ஒரே ஊர்தியில் பயணிக்கும் சகோதரர்கள் குழு என, ஒன்றிப்பின் மறைவல்லுநர் என அண்மையில் அறிவிக்கப்பட்ட புனித இரேனியுஸ் கூறியிருக்கிறார் என்றும், இந்த ஊர்தியில் ஒன்றிப்பு வளர்கிறது மற்றும், பக்குமடைகிறது என்றும் எடுத்துரைத்தார்.

இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்படும் இன்ப, துயரங்களை, ஒருவர் ஒருவரோடு பகிர்ந்துகொள்வதால் முன்னோக்கிச் செல்லமுடியும் என்றும், ஒன்றிப்பு ஒரு மறைப்பணி என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளால் வழங்கப்படும் பொதுவான சான்றுவாழ்வுக்கு நன்றியும் தெரிவித்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2022, 15:37