தேடுதல்

புலம்பெயர்ந்தோரை உள்ளடக்கிய வருங்காலத்தை அமைப்போம்

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 108வது உலக நாள், “புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரோடு வருங்காலத்தை அமைத்தல்” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோரை உள்ளடக்கிய, மற்றும், எவரும் ஒதுக்கப்பட்டுவிடாத ஒரு வருங்காலத்தை அமைப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதம் 25ம் தேதி சிறப்பிக்கப்படும்  புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 108வது உலக நாளை முன்னிட்டு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் துறை வெளியிட்டுள்ள காணொளியில், திருத்தந்தை இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மையத்தில் வலுவற்றவர்கள்

புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோர் போன்ற பலர் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை உலகினருக்கு உணர்த்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இக்காணொளியில், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் உடல் ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் வாழ்கின்ற அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் முறையில் ஒரு வருங்காலம் உருவாக்கப்படவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

சமுதாயத்தில் மிகவும் வலுவற்றவர்களை மையத்தில் வைப்பது என்பதன் அரத்தம் என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? என்ற கேள்வியையும் அக்காணொளியில் எழுப்பியுள்ள திருத்தந்தை, வலுவற்றவர்கள் வாழ்கின்ற சூழலில், நற்செய்தியை மையமாக வைத்து, எந்த ஒரு நேரத்திலும் நம்மை இருத்தவேண்டும் என்று அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். 

எல்லாருக்கும் ஒரேவிதமான வாய்ப்பளிக்க நாம் அனைவரும் ஒன்றுசேரவேண்டும் எனவும் அக்காணொளியில் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவிலிருந்து புலம்பெயர்ந்து ஈக்குவதோர் நாட்டில் தன் குடும்பத்தோடு வாழ்ந்துவரும் அன்னா என்பவர், தன் அனுபவத்தை அக்காணொளியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 108வது உலக நாள், “புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரோடு வருங்காலத்தை அமைத்தல்” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகின்றது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2022, 15:23