திருத்தந்தை: இயேசு கிறிஸ்து, நம் வாழ்வின் பசிகளுக்கு உணவளிக்கிறார்

திருநற்கருணையில் பிரசன்னமாக இருக்கின்ற கிறிஸ்து, வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல உதவுகிறார், அதோடு, நம் பயணத்தோழராக தன்னையே நமக்கு வழங்குகிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

திருநற்கருணையில் பிரசன்னமாய் இருக்கின்ற இயேசு, நம் ஒவ்வொருவரையும் தன் இதயத்தில் இருத்தி பராமரிக்கிறார், மற்றும், நம் தேவைகளை நிறைவேற்றுகிறார், அதேநேரம், தேவையில் இருப்போருக்கு உதவுமாறு நமக்கு அழைப்புவிடுக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 19, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, இந்நாளில் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, ஆண்டவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பு, மற்றும், அக்கறையை, திருநற்கருணையில் எவ்வாறு அனுபவிக்கமுடியும் என்பதை எடுத்துரைத்தார்.

இயேசு, இறுதி இராவுணவின்போது ஏற்படுத்திய திருநற்கருணை, ஒரு பயணத்தின் இறுதிபோன்று உள்ளது, அதனை, இயேசு, பல்வேறு அடையாளங்கள் வழியாக, எல்லாவற்றுக்கும் மேலாக, லூக்கா நற்செய்தியில் (லூக்.9:11b-17) பதிவுசெய்யப்பட்டிருக்கும் அப்பங்களைப் பலுகச்செய்த நிகழ்வின் வழியாக முன்னுரைத்திருக்கிறார் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆண்டவரின் அன்புப் பராமரிப்பு

தன் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவும், பல்வேறு தீமைகளிலிருந்து விடுதலைபெறுவதற்குமென தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்கள் கூட்டத்தை இயேசு பராமரித்த முறை குறித்து விளக்கிய திருத்தந்தை, இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார், அனைவரும் வயிறார உண்டனர் என்று கூறினார்.

இவ்வாறு திருநற்கருணையில் ஆண்டவரின் அன்பு மற்றும், அக்கறையை கிறிஸ்தவர்கள் அனைவரும் தெளிவாக அனுபவிக்கலாம் என்றும், கிறிஸ்துவின் தூய்மைமிகு உடல், மற்றும் குருதியை, நம்பிக்கையோடு பெறுபவர்கள், அவற்றை உண்பதோடு மட்டுமன்றி, திருப்தியும் அடைகின்றனர் என்றும் உரைத்த திருத்தந்தை, உண்ணுதல் மற்றும், திருப்தி அடைதல் ஆகிய இரு அடிப்படைத் தேவைகள், திருநற்கருணையில் நிறைவைக் காண்கின்றன என்று கூறினார்.  

திருத்தந்தையின் மூவேளை செப உரை 190622
திருத்தந்தையின் மூவேளை செப உரை 190622

இயேசு அனைத்தையும் பராமரிக்கிறார்

அப்பங்களும் மீன்களும் பலுகச்செய்த புதுமை, கண்ணைக்கவரும் முறையில் நடைபெறவில்லை, மாறாக, பெரும்பாலும் இரகசியமாக, அதாவது, அப்பங்கள் பரிமாறப்படும்போது அவை அதிகரித்துக்கொண்டே இருந்தன என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் கூட்டம் அவற்றை உண்டபோது, இயேசு அனைத்தையும் பராமரிக்கிறார் என்பதை அம்மக்கள் உணர்ந்தனர், இதுவே, திருநற்கருணையில் ஆண்டவர் பிரசன்னமாக இருப்பது என்று எடுத்துரைத்தார்.

விண்ணகத்தின் குடிமக்களாக இருக்குமாறு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார், அதேநேரம், இவ்வுலகப் பயணத்தில் நாம் எதிர்கொள்பவை குறித்தும் கருத்தில் கொண்டிருக்கிறார் என்று மூவேளை செப உரையில் கூறியத் திருத்தந்தை, திருநற்கருணை நம் தினசரி வாழ்வுக்குத் தூரமாக இல்லை எனவும் கூறினார்.

நம்மைச் சுற்றிலும் உணவுப் பசி நிலவுகின்றது, அதேநேரம், உடனிருப்பு, ஆறுதல், நட்பு, நல்ல நகைச்சுவை, அக்கறை ஆகியவற்றுக்கான பசியும் நிலவுகின்றது எனவும், இந்த நம் தேவைகள் மீதுள்ள கிறிஸ்துவின் அக்கறையை திருநற்கருணையில் கண்டுகொள்கிறோம், இதேபோன்று, நம்மைச் சுற்றி வாழ்பவர்களின் தேவைகளுக்கும் நாம் அக்கறை காட்டவேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

திருநற்கருணையில் கிறிஸ்துவின் வாழ்வைக் கண்டுகொள்கிறோம், அதில் பிரசன்னமாக இருக்கின்ற அவர் நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல உதவுவது மட்டுமன்றி, நம் பயணத்தோழராக தன்னையே நமக்கு வழங்குகிறார், நம் விவகாரங்களில் நுழைகிறார், தனிமையாய் இருக்கையில் நம்மைச் சந்திக்கிறார், உற்சாக உணர்வை மீண்டும் தருகிறார் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2022, 12:30