தேடுதல்

புனிதர்கள் பேதுரு, பவுல் நம்பிக்கையில் வளர கற்றுக்கொடுக்கின்றனர்

நம்பிக்கையின் பயணம், ஒருபோதும் பூங்காவில் நடப்பது அல்ல, மாறாக சவால் நிறைந்தது, சிலவேளைகளில் சிரமமானது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நம் கிறிஸ்தவ நம்பிக்கைப் பயணம் நிறைவற்றதாக இருந்தாலும்கூட, ஆண்டவரில் நம் நம்பிக்கையை எப்போதும் அதிகரிப்பதற்கும், அவருக்கு நெருக்கமாக இருப்பதில் வளர்வதற்கும் தேவையான வழிமுறைகளைக் கற்றுத்தருமாறு, புனிதர்கள் பேதுரு மற்றும், பவுலிடம் இறைஞ்சுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் நண்பகல் மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

ஜூன் 29 இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட, உரோம் நகரின் பாதுகாவலர்களான  திருத்தூதர்கள் பேதுரு, மற்றும், பவுல் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நண்பகலில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தூதர்கள் பேதுருவும், பவுலும், ஆண்டவர் மீதுள்ள தங்களின் நம்பிக்கையில் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும், குறைகள் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இயேசுவுக்கு நெருக்கமாக இருப்பதில் வளர்வதற்கு நாம் மேற்கொள்ளும் போராட்டங்களை இத்திருத்தூதர்களின் போராட்டங்களோடு தொடர்புபடுத்தலாம் என எடுத்துரைத்தார்.

“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என பேதுரு இயேசுவிடம் கூறிய இப்பெருவிழாவின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மூவேளை உரை வழங்கிய திருத்தந்தை, மீனவரான சீமோன், பின்னர் பேதுரு என அழைக்கப்பட்டார், இதுவே அவரின் பயணத்திற்குத் தொடக்கமாக இருந்தது என்றும், பேதுரு உரைத்த வார்த்தைகள் அவரது வாழ்வில் ஆழமாக வேரூன்றுவதற்கு நீண்டகாலம் எடுத்தது என்றும் கூறியுள்ளார்.

பல கிறிஸ்தவர்கள் எதிர்கொள்கின்ற ஒரு நம்பிக்கைப் பயணத்தைப் போலவே திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் நம்பிக்கைப் பயிற்சிப் பயணமும் இருந்தது என்று உரைத்த திருத்தந்தை, நாமும், இயேசுவே மெசியா, வாழும் கடவுளின் மகன் என்று நம்புகிறோம், ஆயினும், நற்செய்திக்கு முழுவதும் ஏற்றவகையில் சிந்திக்கவும், செயல்படவுமான நம் பாதைக்கு பொறுமை, மற்றும் தாழ்ச்சி அதிகம் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

மூவேளை செப உரை 290622
மூவேளை செப உரை 290622

புனித பவுலின் மனமாற்றம்

புனித பவுலின் மனமாற்றம் மற்றும், சந்தேகங்கள் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, இவர், நம்பிக்கையில் மெதுமெதுவாக பக்குவம் அடையும் பயணத்தில், நிச்சயமற்றதன்மை மற்றும், சந்தேகம் ஆகிய தருணங்களை எதிர்கொண்டார் எனவும், தமஸ்கு செல்லும் சாலையில் உயிர்த்த ஆண்டவர் அவருக்குத் தோன்றியது, அவரை ஒரு கிறிஸ்தவராக மாற்றியது எனவும் கூறியுள்ளார்.  

நம்பிக்கையின் பயணம், ஒருபோதும் பூங்காவில் நடப்பது அல்ல, மாறாக சவால் நிறைந்தது, சிலவேளைகளில் சிரமமானது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவராக மாறின பவுலும், நம்பிக்கையை, மெது மெதுவாக, குறிப்பாக சோதனை நேரங்கள் வழியாக கற்றுக்கொண்டார் என்றுரைத்தார்.

“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என, இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுகையில், நான் எப்போதும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வில் சொல்கிறோனே என்ற கேள்வியை எழுப்பவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, நம்பிக்கையின் பாதையில் திருத்தூதர்களைப் பின்பற்றி நடக்க அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என, தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2022, 15:34