திருத்தந்தை: நலப் பராமரிப்பு, பாகுபாடின்றி வழங்கப்படவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான்
அனைவரின் நலவாழ்வும் பராமரிக்கப்படுவதற்கு உறுதிசெய்யும் வகையில், நலவாழ்வு அமைப்பு உருவாக்கப்பட நாம் எல்லாரும் பணியாற்றவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய நலவாழ்வு கூட்டமைப்பிடம் கூறியுள்ளார்.
ஜூன் 04, இச்சனிக்கிழமையந்று, Federsanità எனப்படும் இத்தாலிய நலவாழ்வு கூட்டமைப்பின் ஏறத்தாழ நூறு பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, நலவாழ்வு பராமரிப்புக்குரிய வளங்களைக் குறைப்பது, மனித சமுதாயத்திற்கு அவமானம் என்று கூறியுள்ளார்
மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள், மருத்துவ அறிவியல் ஆய்வகங்கள், சிகிச்சை மையங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள், நலவாழ்வு அதிகாரிகள், இத்தாலிய நகரசபை கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய இக்கூட்டமைப்பு, சமூக-நலவாழ்வுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை ஊக்குவித்து வருகிறது.
எல்லைகளைத் தகர்க்கின்றது
இக்கூட்டமைப்பினர் தங்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவும் மூன்று மாற்று மருந்துகளைக் கூற விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, நோயாளியில் ஒருவர் தன்னையே பார்ப்பது, தன்னலச் சங்கிலியைத் தகர்த்தெறிந்து, நாம் சிலநேரங்களில் ஏற விரும்பும் அரியணையைத் தள்ளிவிட்டு, புவியியல் அமைப்பு, மொழி, இடம், மதம், சமூகநிலை என்ற வேறுபாடுகளின்றி அனைவரையும் உடன்பிறந்தோராக ஏற்க வைக்கின்றது என்று எடுத்துரைத்துள்ளார்.
ஒரு நாடு, தன் பொது நலவாழ்வுப் பராமரிப்பு நடவடிக்கையை இழக்கும்போது, சிகிச்சைக்குப் பணம் கொடுக்கக் கூடியவர்கள், கொடுக்க இயலாதவர்கள் என்ற பாகுபாடுகளை குடிமக்களுக்கு இடையே பார்க்கத் தொடங்குகிறது என்றுரைத்த திருத்தந்தை, இதனாலேயே பொது நலப் பராமரிப்பு, உங்களது செல்வம் என்று கூற விழைகிறேன், இத்தாலியில் இச்செல்வத்தை இழக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மனிதரின் மாண்பு
இரண்டாவது மாற்று மருந்து, முழு மனிதர் மீது அக்கறை காட்டுவதாகும் என்றும், மூன்றாவது மாற்று மருந்து பொது நலனில் கவனம் செலுத்துவதாகும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இயேசு, மக்களை குணமாக்கியபோது, அவர்களின் உடல்நோயை மட்டுமல்லாமல், முழு மனிதரையே குணமாக்கினார், மற்றும், அவர்களை சமுதாயத்தில் மீண்டும் இணைத்து புதிய வாழ்வை அவர்களுக்கு வழங்கினார் என்று கூறியுள்ளார்.
நலவாழ்வு வசதிகள் எல்லாருக்கும் வழங்கப்படவேண்டும், மருத்துவத் துறையிலும்கூட, பொருளாதார அல்லது அரசியல் ஆதாயத்தை நுழைப்பதற்குச் சோதிக்கப்படுகிறோம் எனவும் உரைத்த திருத்தந்தை, கோவிட்-19 பெருந்தொற்று, அதிகரித்துவரும் ஆயுத மோதல்கள், ஏழை-செல்வந்தர் இடைவெளி போன்றவை கற்றுக்கொடுத்த பாடங்களையும் எடுத்தியம்பினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்