திருஅவை, உயிர்த்துடிப்புள்ள விசுவாசத்தோடு இறையியலை......
மேரி தெரேசா: வத்திக்கான்
இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டத்தின் அருள்பணித்துவ பயிற்சி கல்லூரியின் "La Scuola Cattolica" அதாவது கத்தோலிக்கப் பள்ளி என்ற இறையியல் இதழ் வெளியிடப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கல்லூரியின் பயிற்சியாளர்கள் முப்பது பேரை இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 17, இவ்வெள்ளி நண்பகலில், வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் அவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இந்த 150ம் ஆண்டு நிறைவு இக்காலத்தில் இறையியல் கல்வி நம்முன் வைக்கின்ற முக்கிய பணி குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு அழைப்புவிடுக்கின்றது என்று கூறினார்.
இறையியல் என்பது, திருஅவையின் உயிருள்ள நம்பிக்கைக்கு ஆற்றும் ஒரு பணி, இறையியல் என்பது, மனிதசமுதாயத்தில் வல்லுநர்களை உருவாக்கும் திறன்பெற்றது, நற்செய்தி அறிவிப்புப் பணியில் இறையியல் ஆகிய இன்றையத் திருஅவைக்குத் தேவையான மூன்று முக்கிய இறையியல் கூறுகள் பற்றிய தன் கருத்துக்களை எடுத்துரைக்க விரும்புவதாகத் திருத்தந்தை கூறினார்.
இறையியல், திருஅவையின் உயிருள்ள நம்பிக்கைக்கு...
இறையியல் கல்வி, வருங்கால அருள்பணியாளர்களை உருவாக்குவதற்கு மட்டுமே பயனுள்ளது என்று பலர் நினைக்கின்றனர், உண்மையில், இறையியல், எல்லாக் காலத்திலும் மக்களைச் சென்றடையும்வண்ணம் அமைந்திருக்கவேண்டும் என்றும், இந்நவீன உலகிற்கு கிறிஸ்தவ நம்பிக்கையை விளக்குவது மிகவும் முக்கியம் என்றும் திருத்தந்தை கூறினார்.
இதனாலேயே இறையியல் மொழி எப்போதும் உயிர்த்துடிப்புள்ளதாக இருக்கவேண்டும், அதேநேரம், அதைப் புரிந்துகொள்ளப்படும்வகையில் அமைப்பதில் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, இந்நவீன உலகிற்கு, நம்பிக்கையின் உண்மைகளை எடுத்துரைக்கும் முறையை பயிற்சியாளர்கள் தெரிந்துவைத்திருக்கவேண்டும் எனவும் கூறினார்.
அருள்பணியாளர்களும், திருத்தொண்டர்களும், துறவியரும், பொதுநிலையினரும் நன்முறையில் உருவாக்கப்பட்டால் மட்டுமே, வருங்கால இறையழைத்தல்களுக்கு உதவும் என்றும், ஒவ்வோர் அழைத்தலும் திருஅவையின் இதயத்தில் பிறக்கின்றது, வளர்கின்றது மற்றும், மேம்படுகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
இளையோரும் குருத்துவ மாணவரும், தங்களின் பயிற்சிகளில் போதனைகளைவிட சான்று வாழ்விலிருந்தே அதிகம் கற்றுக்கொள்கின்றனர் என்றும், இன்றைய உலகில், பாவம் மற்றும், தோல்விகளை எதிர்கொள்பவர்களுக்கு, ஆண்டவரின் நன்மைத்தனத்தை அறிவிக்கும் நல்ல அருள்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்