தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை: உக்ரைனில் துன்புறும் மக்களுக்கு உதவுங்கள்

இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி, உக்ரைனை இரஷ்யா ஆக்ரமித்ததிலிருந்து அந்நாட்டில் இடம்பெற்றுவரும் போர் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவுமாறு, ஜூன் 15, இப்புதனன்று 56வது முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

போரால் கடுமையாய் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனில் தியாகப் பலியாகியுள்ள மக்களை நினைவுகூரவும், அந்நாட்டில் துன்புறும் மக்களுக்கு உதவவும் வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 15, இப்புதன் பொது மறைக்கல்வியுரையின்போது கேட்டுக்கொண்டார்.

இப்புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல நாடுகளின் திருப்பயணிகளுக்கு, முதுமை பற்றிய தன் 14வது மறைக்கல்வியை வழங்கியபோது இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நம் நினைவு, பாசம், இறைவேண்டல்கள் மற்றும், உதவிகள் ஆகிய அனைத்தும், உண்மையாகவே தியாகப்பலியாகிவரும் உக்ரைன் மக்கள் மீது தொடர்ந்து இருக்கவேண்டும் என்று கூறினார்.

இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி, இரஷ்யா உக்ரைனை ஆக்ரமித்ததிலிருந்து அந்நாட்டில் இடம்பெற்றுவரும் போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவவேண்டும் என்று இப்புதனன்று 56வது முறையாக, அழைப்புவிடுத்த திருத்தந்தை, போர், தொலைவில் நடக்கின்ற ஒரு காரியம் என்பதுபோல் வாழப் பழகாமல், போரினால் துன்புறும் மக்களை மறக்காதிருப்போம் என்று கெஞ்சிக் கேட்பதாகத் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டைவிட்டு எழுபது இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும், நாட்டிற்குள்ளே ஏறத்தாழ எண்பது இலட்சம் மக்களும் கட்டாயமாகப் புலம்பெயர வைத்துள்ள இப்போர் நிறுத்தப்படுமாறும், துயருறும் அம்மக்களுக்கு உதவுமாறும் திருத்தந்தை எண்ணற்ற தடவைகள் அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அந்நாட்டில் அமைதிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு திருப்பீடம் இடைநிலை வகிக்கத் தயாராக இருப்பதாகவும் பலமுறை குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, திருப்பீடத்திலிருந்து தன் பிரதிநிதிகளையும் அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளதோடு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன் புதன் பொது மறைக்கல்வியுரைகளில், ஐரோப்பிய நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தும்போது, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாட்டினரிடம் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாடு பற்றிக் குறிப்பிட்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 15, இப்புதன் மறைக்கல்வியுரையில் இத்தாலிய திருப்பயணிகளை வாழ்த்தியபோது உக்ரைன் மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2022, 14:38