தேடுதல்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் காயமடைந்தோர்  ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் காயமடைந்தோர்  

ஆப்கான் நிலநடுக்கத்தில் இறந்தோருக்காக திருத்தந்தை செபம்

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கே, பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள Khost நகரத்திற்கு ஏறத்தாழ 44 கிலோ மீட்டர் தூரத்தில் ஜூன் 22, இப்புதன் உள்ளூர் நேரம் இரவு 1.30 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூன் 22 இப்புதன் அதிகாலையில், ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் மற்றும், காயமடைந்தோருக்காக, தான் இறைவேண்டல் செய்வதாகவும், அப்பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் கிடைக்கவேண்டும் என விண்ணப்பிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தெரிவித்தார்.

ஜூன் 22, இப்புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரையை வழங்கியபின்னர் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ள நிலநடுக்கம் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, பெருமளவில் உயிர்ச்சேதம் மற்றும், பொருள்சேதங்களை ஏற்படுத்தியுள்ள இப்பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரோடும் தன் உடனிருப்பைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

அனைவரின் உதவியோடு ஆப்கானிஸ்தானின் அன்புக்குரிய மக்களின் துயர்கள் நீங்கும் என்ற தன் நம்பிக்கையையும் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் மிகக்கடுமையாய் இடம்பெற்றுள்ள நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மற்றும், 600 பேர் காயமடைந்துள்ளனர். இறப்பவரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கே, பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள Khost நகரத்திற்கு ஏறத்தாழ 44 கிலோ மீட்டர் தூரத்தில் இப்புதன் உள்ளூர் நேரம் இரவு 1.30 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபின்னர், பல பன்னாட்டு உதவி நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால், மீட்புப்பணி நடவடிக்கைகள் சிக்கலானதாக உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2022, 15:16