தேடுதல்

புனித லூயிஜி ஓரியோனே குடும்பத்தினர் சந்திப்பு புனித லூயிஜி ஓரியோனே குடும்பத்தினர் சந்திப்பு 

திருத்தந்தை: புதிய வழியில் நற்செய்தி அறிவியுங்கள்

ஏழைகளுக்காக என்ற பிறரன்பின் தனிவரத்தை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுங்கள், உடன்பிறந்த உணர்வு உறவுகளைப் பேணி வளருங்கள், புதிய எல்லைகளுக்கு அச்சமின்றி திறந்தமனம்கொண்டிருங்கள்– திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இன்றைய தனிமனிதக்கோட்பாட்டிற்கு மத்தியில், பிறரன்பின் தீ பற்றியெரியச் செய்யுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 25, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் தான் சந்தித்த ஓரியோனே குடும்பத்தின் 250 பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

புனித லூயிஜி ஓரியோனே (1872–1940) அவர்கள் பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவையொட்டி, அப்புனிதர் ஆரம்பித்த இறைபராமரிப்பு பிள்ளைகள் சபையின் பொதுப்பேரவை, வட இத்தாலியின் Montebello della Battaglia நகரில், “புதிய காலங்களின் தீயில் உங்களை அமர்த்துங்கள் - பிறரன்பின் இறைவாக்கு வழியாக உலகுக்கு நற்செய்தி அறிவியுங்கள்” என்ற தலைப்பில் இவ்வாண்டு மே 31ம் தேதி முதல், ஜூன் 18ம் தேதி வரை நடைபெற்றது.

இப்பேரவையில் பங்குபெற்றோர் மற்றும், அப்புனிதர் தொடங்கிய குடும்ப அருங்கொடை அமைப்பின் உறுப்பினர்கள் என 250 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையை ஆரம்பித்தவரின் எழுத்துகளால் தூண்டுதல்பெற்று, எல்லா இடங்களிலும் புதிய வழியில் நற்செய்தியை அறிவிக்குமாறு கூறியுள்ளார்.

ஓரியோனே குடும்பம் என்றழைக்கப்படும் இப்பிரதிநிதிகள், நற்செய்தியை அறிவிப்பதை உறுதிசெய்யும் வகையில், அவர்கள் பிறரன்புக்குச் சான்றுபகருமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, இதை எண்பித்துக்காட்டும் விதமாக, நம்மை அரித்துத்தின்றும் புழுவாக அமைந்துள்ள வீணற்றப் பேச்சுக்களைத் தவிர்க்க நாவுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.  

புனித லூயிஜி, பிறரன்புக்கு மிகப்பெரும் சான்றாக விளங்கினார் எனவும், பனிக்கட்டியாக உறைந்துபோன உலகை உருகச்செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும், அன்பின் சூளை தேவை என்று அப்புனிதர் கடவுளிடம் மன்றாடினார் என்றுரைத்த திருத்தந்தை, அப்புனிதர் பிறந்து 150 ஆண்டுகள் சென்றும், அவரின் சொற்கள், ஓரியோனே குடும்பத்திற்கு வருங்காலப் பாதையைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளன என்று கூறியுள்ளார்.

தரமான குழும வாழ்வு, உறவுகள், பொது செபம் ஆகியவை ஏற்கனவே திருத்தூதுப் பணியாக உள்ளன, இவையே அச்சபையின் சான்றுவாழ்வை எடுத்துரைப்பன, நம் மத்தியில் தீர்ப்பிடுதல், அல்லது புறணிபேசுதல் போன்ற இறுக்கமான சூழல் நிலவினால் அது திருத்தூதுப் பணிக்குச் சான்றாக அமையாது என்று திருத்தந்தை கூறினார்.

வீணானப் பேச்சுக்களைத் தவிர்த்தல் எளிதானதல்ல, ஆயினும் நாவுகளைக் கட்டுப்படுத்துங்கள், அது உங்களது குழும வாழ்வுக்கு நன்மைபயக்கும் என்று, ஓரியோனே குடும்பத்தினரிடம் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2022, 15:43