தேடுதல்

புனித பவுல் சபையின் பிரதிநிதிகள் புனித பவுல் சபையின் பிரதிநிதிகள்  

திருத்தந்தை: சிந்திக்கும் முறையைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்

மக்களில் மறைந்துகிடக்கும் கடவுள்மீதுள்ள தாகத்தை வெளிக்கொணர்வதற்கு அனைத்து சமூகத்தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துங்கள் – புனித பவுல் சபையினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்துவின் செய்தி, மற்றும், திருஅவையின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளைப் பரப்புவதற்கு சமூகத்தொடர்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தினால் மட்டும் போதாது, மாறாக, அச்செய்தியை, நவீன தொடர்புசாதனங்களால் உருவாக்கப்பட்டுள்ள புதிய கலாச்சாரத்திற்குள் இணைத்துப் பரப்பவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பவுல் சபையினிடம் கூறியுள்ளார்.

இத்தாலியின் அரிச்சாவில் தங்களின் 11வது பொதுப்பேரவையை ஜூன் 18, இச்சனிக்கிழமையன்று நிறைவுசெய்த புனித பவுல் சபையின் அறுபது பிரதிநிதிகளை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.  

"உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! (உரோ.12,2): சமூகத்தொடர்பு கலாச்சாரத்தில் நற்செய்தியின் மகிழ்வை இறைவாக்குப் பண்புடன் அறிவிப்பதற்கு அழைப்பு" என்ற இப்பொதுப் பேரவையின் கருப்பொருளை மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை, ஒருவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றுவதற்குமுன்னர், தன்னையே மாற்றவேண்டும் என்று பவுலடிகளார் கூறுவதைச் சுட்டிக்காட்டினார்.

சிந்திக்கும் முறையைப் புதுப்பித்தல் என்பது, இச்சபையைத் தொடங்கிய அருளாளர் ஜாக்கோமோ ஆல்பெரியோனே அவர்களின் ஆன்மீக மற்றும், திருத்தூதுப் பணி வாழ்வின் மையமாக இருந்தது என்றும், அனைத்துமே மனதிலிருந்து பிறப்பதால், முதலில் மனநிலையில் மாற்றம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

எனவே முதலில், நம் போதகர் இயேசுவின் மனநிலைப்படி நம் மனநிலை மாற்றம் பெறவேண்டும், இது, திருஅவைக்கும், பவுல் சபையினருக்கும் மிகப்பெரும் சவாலாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, டிஜிட்டல் சூழலில், மக்கள் மத்தியில் உறவுகளைக் கட்டியெழுப்பவும், சந்திப்பு கலாச்சாரத்திற்கு உதவவும் சமூகத்தொடர்பு சாதனங்கள் எவ்வகையில் உதவ முடியும் என்பது குறித்து சிந்திக்குமாறு அழைப்புவிடுத்தார்.

மற்றவரோடு இணைந்து பணியாற்ற...

புனித பவுல் சபையின் பிரதிநிதிகள்
புனித பவுல் சபையின் பிரதிநிதிகள்

பவுல் சபையினர் தங்களின் பணிகளை தனித்து ஆற்றாமல், மற்ற மறைப்பணியாளர்களின் ஒத்துழைப்போடு ஆற்றவேண்டும் எனவும், அதன் வழியாக குழுவாகப் பணியாற்றுவது குறித்து கற்றுக்கொள்ள இயலும் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையினர் தங்களின் தனிவரத்தை, திருஅவை மேற்கொண்டுவரும் ஒன்றிணைந்த பயணப் பாதைக்கு உதவ ஆவனசெய்ய வேண்டும் என்றும், இவர்கள் தங்களின் உறவுகளிலும், மறைமாவட்ட குழுமங்களிலும் உடன்பிறந்த உணர்வில் வாழுமாறும் கேட்டுக்கொண்டார். 

இவ்வாண்டு மே 29ம் தேதி தொடங்கிய புனித பவுல் ஆண்கள் சபையின் 11வது பொதுப் பேரவை, ஜூன் 19, இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. இதில் 22 நாடுகளிலிருந்து 31க்கும், 78 வயதுக்கும் உட்பட்ட பிரதிநிதிகள் பங்குபெற்றனர். இச்சபையினர், ஏறத்தாழ முப்பது நாடுகளில் சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக நற்செய்தியை அறிவித்து வருகின்றனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2022, 14:48