சிசிலித் தீவு மக்களின் அன்னை மரியா பக்திக்கு பாராட்டு
மேரி தெரேசா: வத்திக்கான்
இத்தாலியின் சிசிலித் தீவில், வேலைவாய்ப்புகள் குறைவுபடுவதால், பலர் கசப்புணர்வு மற்றும், ஏமாற்றத்தில் வாழ்கின்றவேளை, அவர்களுக்கு தலத்திருஅவையின் உடனிருப்பு மற்றும், இரக்கத்தை வெளிப்படுத்துமாறு, அத்தீவின் ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 09, இவ்வியாழனன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், தன்னைச் சந்தித்த, சிசிலித் தீவின் ஏறத்தாழ 300 ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்களுக்கு உரையாற்றிய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தீவில் வாழ்கின்ற மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு தலத்திருஅவை பணியாளர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஊக்கப்படுத்தினார்.
இந்த இத்தாலியத் தீவு, வரலாற்று ரீதியாக, புலம்பெயரும் மக்கள் கடந்துசெல்லும் பாதையாக அமைந்து வருகின்றது என்றும், அவ்விடத்திற்கு வருகின்ற மக்கள் அனைவரும் தங்களின் கலாச்சாரத்தை விட்டுச்செல்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இவ்வாறு கூறுகையில், இது மகிழ்ச்சியான தீவு என்று கூறவரவில்லை, மாறாக, அதன் அமைப்பு அவ்வாறு உள்ளது எனவும், இது சிசிலித் தீவு மக்களை பெருமளவில் பாதிக்கின்றது எனவும் உரைத்த திருத்தந்தை, சிசிலித் தீவில் மாபெரும் நற்பண்புகளும், அதேநேரம், கொடூரமான வன்முறை நிகழ்வுகளும் இடம்பெற்றிருப்பதற்கு நாம் சாட்சிகளாக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
அத்தீவில் இளையோரின் வேலைவாய்ப்பின்மை ஏறத்தாழ ஐம்பது விழுக்காடாக இருக்கின்ற காரணத்தால், பல சிறார் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர் மற்றும், குற்ற வாழ்வில் ஈடுபடுகின்றனர் என்றும் திருத்தந்தை கவலை தெரிவித்தார்.
தற்போது சிசிலித் தீவில் மக்கள் தொகையும், குழந்தை பிறப்பும் குறைந்து வருகின்றன, வேலைவாய்ப்பைத் தேடி புலம்பெயரும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, இந்நிலையில் அத்தீவில் மறைப்பணியாற்றும் ஆயர்களும், அருள்பணியாளர்களும், அறநெறி வழிகாட்டுதலில் துணிச்சலோடு இருக்குமாறு திருத்தந்தை ஊக்கப்படுத்தினார்.
அருளாளர்கள் Pino Puglisi, Rosario Livatino மற்றும், மாஃபியா குற்றக்கும்பலுக்கு எதிராகவும், கிறிஸ்துவின் அன்பை சிசிலி மக்களுக்கு வெளிப்படுத்தவும் உழைத்த திருஅவையின் பணியாளர்கள் ஆகிய அனைவரின் வீரத்துவமான முன்மாதிரிகைகளைப் பின்பற்றி நடக்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்கப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்