தேடுதல்

உக்ரைனிலிருந்து வந்துள்ள சிறுவன் உக்ரைனிலிருந்து வந்துள்ள சிறுவன்  

திருத்தந்தை: கைவிடப்பட்ட சிறாருக்காக ஒன்றிணைந்து செபிப்போம்

நல்லிணக்கத்தை உருவாக்குபவராகிய தூய ஆவியாரிடம் மன்றாடுவதற்கு ஒருபோதும் சோர்வடையவேண்டாம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

போருக்கு அஞ்சி, சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் கைவிடப்பட்ட சிறாருக்காக நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 04 இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, பல்வேறு உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி சிறார் குறித்த விழிப்புணர்வு உலக நாளை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, பல்வேறு நிலைகளில் துன்புறும் அப்பாவிச் சிறாருக்காக, கடவுளை மன்றாடுவோம் என்று கூறியுள்ளார்.

போரினால் நாட்டைவிட்டு வெளியேறி கைவிடப்பட்டநிலையில், பசி, மருத்துவப் பராமரிப்பு கிடைக்காமை, பாலியல் பயன்பாடு, வன்முறை, மற்றும், பிறப்புரிமை இழப்பு போன்றவற்றால் உலகெங்கும் துன்புறுகின்ற சிறாருக்காகச் செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

1982ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி, ஐ.நா. பொது அவை, பாலஸ்தீனம் குறித்து கூட்டிய அவசரகால அமர்வில், பல்வேறு வன்தாக்குதல்களுக்குப் பலியாகும் அப்பாவி சிறார் குறித்த விழிப்புணர்வு நாள், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 4ம் தேதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என உலகினருக்கு அழைப்புவிடுத்தது.

2வது டுவிட்டர்

மேலும், ஜூன் 05, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் பெந்தக்கோஸ்து பெருவிழாவை மையப்படுத்தி, தன் டுவிட்டர் பக்கத்தில் மற்றுமொரு குறுஞ்செய்தியை, இச்சனிக்கிழமையன்று பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“சந்திப்புக் கலாச்சாரம், பன்மைத்தன்மையில், நல்லிணக்கத்தைத் தேடுவதில் கட்டியெழுப்பப்படவேண்டும். இந்நல்லிணக்கத்திற்கு, ஏற்றுக்கொள்ளுதல், திறந்தமனம், மற்றும், படைப்புத்திறன் ஆகியவை தேவைப்படுகின்றன. இத்தகைய வாழ்வுமுறையின் வேர் நற்செய்தியாகும். நல்லிணக்கத்தை உருவாக்குபவராகிய தூய ஆவியாரிடம் மன்றாடுவதற்கு ஒருபோதும் சோர்வடையவேண்டாம்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலி

மேலும், ஜூன் 05 இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார். இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் பங்குபெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2022, 15:30