இலங்கையில் அமைதி நிலவ திருத்தந்தை விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஜூலை 10, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், இலங்கை, மற்றும், உக்ரைனில் அமைதி நிலவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இலங்கையில் நிலவும் அரசியல், மற்றும், பொருளாதார உறுதியற்றதன்மையின் எதிர்விளைவுகளால் தொடர்ந்து துன்புறும் அம்மக்களோடு தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாக மேலும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இலங்கை ஆயர்களோடு தானும் இணைந்து, அந்நாட்டில் அமைதி நிலவவேண்டும் என மீண்டும் விண்ணப்பிக்கிறேன் என்றும், அந்நாட்டுத் தலைவர்கள், ஏழைகளின் அழுகுரல் மற்றும், மக்களின் தேவைகளைப் புறக்கணிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
அமைதி நிலவ ஐ.நா.
மேலும், இலங்கையில் அமைதி காக்குமாறு, அதிகாரிகளையும், போராட்டதாரர்களையும் கேட்டுக்கொண்டுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையின் உயர் இயக்குனர் அலுவலகம், அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் வன்முறையைத் தவிர்ப்பதற்கு உறுதிசெய்வதாய் இருக்கவேண்டும் என வலியுறுத்திக் கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுத்தலைவர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அந்நாட்டில் நூறு நாள்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் மக்கள் கொந்தளிப்பின் உச்சகட்டமாக, ஜூலை 09 இச்சனிக்கிழமையன்று அரசுத்தலைவர் மாளிகையில் போராட்டதாரர்கள் நுழைந்து அவ்விடத்தை ஆக்ரமித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை ஊரடங்கு சட்டத்தை அறிவித்துள்ளது. அந்நாட்டில் இடம்பெறும் வன்முறையில் இரு காவல்துறையினர் உட்பட குறைந்தது 21 பேர் காயமுற்றுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்