உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக உணர்கிறேன் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம்- வத்திக்கான்
கியூபெக்கிலுள்ள பேராயர் இல்லத்தில் பூர்வீக இனமக்களின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கிய உரை.
இணைந்து நடத்தல்
அன்புச் சகோதரர் சகோதரிகளே, உரோமையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இன்றுவரை நம்மிடையே நிகழ்ந்துவரும் இச்சந்திப்பைக் குறித்து நான் எண்ணும்போது, 'இணைந்து நடத்தல்' (walking together) என்ற சொற்றொடர்தான் என் நினைவுக்கு வருகின்றது.
பல ஆண்டுகளாக உள்ளூர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை மற்றும் தீமையின் பலனை நேரில் கண்டறிவதற்காக நான் ஒரு நண்பராகவும், சகோதரராகவும் உங்களிடம் வந்துள்ளேன்.
உங்களுக்கெதிரான அடக்குமுறை மற்றும் அநீதியான கொள்கைகளை ஆதரித்த ஒரு சில கத்தோலிக்கர்கள் உங்களுக்கு இழைத்த தவறுக்காக என் இதயத்தின் வலியை வெளிப்படுத்துவதற்கான தவ உணர்வில் இங்கு வந்துள்ளேன். எனக்கு உடல் நலக் குறைபாடுகள் இருந்தபோதிலும், உங்களுக்காகவும் உங்களின் முன்னேற்றத்திற்காகவும், சில காரியங்களை முன்னெடுத்துச் செல்ல ஒரு திருப்பயணியாக உங்களிடம் வந்துள்ளேன்.
உடன்பிறந்த உணர்வு நிலையில், நீங்கள் ஒன்றிணைந்து சகோதரர் சகோதரிகளாக வாழவும், உண்மையைத் தேடுவதில் முன்னேற்றம் ஏற்படவும், குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகள் தொடரவும், நம்பிக்கையின் விதைகள் எதிர்கால சந்ததியினருக்கும், பூர்வீக இனமக்களுக்கும், பூர்வீக இனத்தைச் சேராதோருக்கும் விதைக்கப்படவும் இப்பயணத்தை நான் மேற்கொண்டுள்ளேன்.
புதியவற்றைக் கற்றுக்கொண்டவனாகத் திரும்புகின்றேன்
இப்போது என் பயணத்தை முடித்துக்கொண்டு நான் திரும்புகையில், பல புதியவற்றைக் கற்றுக்கொண்டவனாகத் திரும்பிச் செல்கிறேன். நான் உங்களுடன் இருந்த இத்தருணங்களில், உங்கள் வாழ்க்கை அனுபவங்கள், இந்த நிலங்களின் பூர்வீக உண்மைகள் ஆகியவை என் இதயத்தைத் தொட்டன. இவைகள் இன்றுமட்டுமல்ல, எப்போதும் என் நினைவிலிருக்கும் என்று என்னால் சொல்ல முடியும்.
இப்போது, நானும் உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக உணர்கிறேன். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பெரும்பாலும் தனிமனிதராக வாழ விரும்பும் இவ்வுலகில், குடும்பம் மற்றும் சமூகம் பற்றிய உங்களின் உண்மையான உணர்வு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை உணர்கின்றேன். மேலும், இளையோருக்கும் முதியோருக்கும் இடையிலான பிணைப்பை முறையாக வளர்த்துக்கொள்வதும், அனைத்து படைப்புகளுடனும் நலமான மற்றும் இணக்கமான உறவைப் பேணுவதும், எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
பெண்கள் மூவரின் வாழ்வு
அன்பு நண்பர்களே, பெண்கள் குறித்து நான் சிந்திக்கும் இவ்வேளையில், மூவரின் வாழ்வைப் பற்றி உங்களுக்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். முதலாவதாக, புனித அன்னாவைக் குறித்து நினைக்கும்போது, இளகிய மனதுடன் பாட்டிகளை மதித்துப் போற்றவேண்டும் என்பதன் அடையாளமாக அவர் இருக்கிறார் என்பதை உணர்கிறேன்.
இரண்டாவதாக, கடவுளின் தூய்மைமிகு அன்னை மரியாவைக் குறித்து நினைக்கின்றேன். இவ்வுலகில் அன்னை மரியாவைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன்னை ஒரு திருப்பயணி என்று அழைத்துக்கொள்ள முடியாது. காரணம், கடவுளின் கரிசனையை நமக்குக் காட்டவும், தன் திருமகனால் நாம் கரம்பிடித்து வழிநடத்தப்படவும், விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே உள்ள பாதையில், அவர் ஒரு திருப்பயணியாக நடந்துகொள்கிறார். இந்நாள்களில் எனது எண்ணங்களும் இறைவேண்டல்களும் மூன்றாவது பெண்ணான புனித கத்தேரி தெக்கக்குவித்தாவை நோக்கிச் செல்கிறது. இம்மண்ணின் புனிதரான இவர், பல்வேறு வழிகளில் நமக்கு மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
இம்மூன்று பெண்களும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், நம்மிடையே புதியதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றனர். இத்தகைய செயல்கள், நம் மத்தியில் பாதிக்கப்படுவோரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் அல்லது மறதியின்றி வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதற்கும் நமக்கு உதவுகிறது.
இம்மூவரில் புனித அன்னை மரியாவும், புனித கத்தேரி தெக்கக்குவித்தாவும் கடவுளிடமிருந்து தங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைப் பெற்றனர். எந்த மனிதருடமும் கலந்தாலோசிக்காமல் துணிச்சலாக கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். மேலும் அமைதி, பணிவு, மற்றும், விடாமுயற்சியுடன், கடவுளின் திட்டத்தை நிறைவேற்றி வெற்றிகண்டனர். இவ்விருவரும் நமது வாழ்வின் பயணங்களை ஆசீர்வதிப்பார்களாக! மேலும், குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான நமது முயற்சிகள் வெற்றிபெற நமக்காக இறைவனிடம் பரிந்துபேசுவார்களாக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்