தேடுதல்

Iqaluit நகரில் Inuit இனத்தவர் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுளுக்கு மிகவும் விருப்பமான, ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் நடவடிக்கைக்கு நானும் உதவியிருப்பதாக நம்புகிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூலை 29, இவ்வெள்ளி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 37வது திருத்தூதுப் பயணத்தின் கடைசி நாள். இந்நாளின் முதல் நிகழ்வாக, கியூபெக் நகரில் தான் தங்கியிருந்த பேராயர் இல்லத்தில் கனடாவில் மறைப்பணியாற்றும் இயேசு சபை குழுமத்தினரைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. பின்னர், அதே இல்லத்தில் உள்ளூர் நேரம் காலை 10.45 மணியளவில், கியூபெக் நகரில் வாழ்கின்ற பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார். பூர்வீக இனங்களின் மக்களோடு மேற்கொள்ளப்பட்டுவரும், கடவுளுக்கு மிகவும் விருப்பமான ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் நடவடிக்கைக்கு நானும் உதவியிருப்பதாக நம்புகிறேன் என்று திருத்தந்தை இவ்வுரையில் கூறியுள்ளார். கியூபெக் பேராயர் இல்லத்தில் பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளோடு தன் நல்லுணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அவர்கள் ஒவ்வொருவரையும் கைகுலுக்கி முத்திசெய்து வாழ்த்தினார். பேராயர் இல்லத்தில் தனக்கு நல்ல வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி, புனித யோசேப்பு திருவுருவம் ஒன்றையும் பரிசாக அளித்து அங்கிருந்து கியூபெக் விமானத்தளம் சென்று Iqaluit நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கியூபெக் நகருக்கு வடக்கே 2.033 கிலோ மீட்டர் தொலைவில், கனடாவின் வடமுனையில் உள்ள Iqaluit நகரத்திற்கு ஏறத்தாழ மூன்று மணி நேரம் விமானப் பயணம் மேற்கொண்டு அந்நகரை திருத்தந்தை அடைந்தபோது உள்ளூர் நேரம் இவ்வெள்ளி மாலை 3 மணி 50 நிமிடமாக இருந்தது. Iqaluit நகரத்தின் விமான நிலையத்தைச் சென்றடைந்த திருத்தந்தையை, சர்ச்சில்-ஹட்சன் ஆயரும், அமல மரி தியாகிகள் சபையைச் சார்ந்தவருமான அந்தோணி வியெஸ்லாவ் அவர்களும், ஐந்து உள்ளூர் அதிகாரிகளும் வரவேற்று, அங்கிருக்கும் அறையில் சிறிதுநேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று, Nakasuk தொடக்கப் பள்ளிக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை. இப்பள்ளி, அக்கால பூர்வீக இனத்தவர் மாணவர் விடுதிப் பள்ளி  அமைப்பாகச் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முன்னாள் மாணவர்களோடு சேர்ந்து, இயேசு கற்றுக்கொடுத்த வானகத் தந்தையே என்ற செபத்தைச் சொன்னார் திருத்தந்தை. பின்னர் அப்பள்ளி வளாகத்தில் இளையோர் மற்றும், வயதுமுதிர்ந்தோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இளையோர் என்றாலே ஆடல் பாடல்கள் இடம்பெறாமல் இருக்காது. இந்நிகழ்விலும் இளையோர், தங்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை மீட்டி திருத்தந்தையை வாழ்த்திப் பாடினர். அதற்குப்பின்பு, திருத்தந்தையும் உரையாற்றினார். எட்மன்டன், மற்றும், கியூபெக் நகரங்களில் கனடாவின் First Nations, Métis ஆகிய இனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தது போலவே, Iqaluit நகரத்தில் Inuit இனத்தவரையும் சந்தித்து அவர்களோடு தன் அருகாமையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 85 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடாவில் மேற்கொண்ட “தவத் திருப்பயணத்தின்” இறுதி நிகழ்வுகள் Iqaluit நகரில் நடைபெற்றன. இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கனடா நாட்டு முதல் திருத்தூதுப் பயணம், மற்றும், அவரது 37வது திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2022, 15:20