Lac Ste. Anne இறைவார்த்தை வழிபாடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஜூலை 26, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்கு, புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியிலிருந்து 83 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Lac Ste. Anne எனப்படும் திருப்பயண புனித இடத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த புனித இடத்திற்குச் சென்ற திருத்தந்தையை அப்பகுதி பங்குத்தந்தை வரவேற்றார். பின்னர் திருத்தந்தையை அந்த ஏரிப் பகுதிக்கு கோல்ப் காரில் அழைத்துச் சென்றனர். அங்குச் சென்றவுடன், பூர்வீக இன மக்களின் மரபுப்படி, திருத்தந்தை நான்கு பக்கங்களிலும் சிலுவை வரைந்து அத்தண்ணீரை ஆசிர்வதித்தார். சிறிதுநேரம் அமைதியாகச் செபித்தார். பின்னர் அந்த ஏரிக்கரையில் நடைபெற்ற இறைவார்த்தை திருவழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றினார். அதில் திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார்.
அத்திருவழிபாடு முடிந்து பங்குத்தளத்திற்கு வந்தவழியில் அமைக்கப்பட்டிருந்த முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா திருவுருவத்தை ஆசிர்வதித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், அங்கிருந்து மீண்டும் 83 கிலோ மீட்டர் தூரம் காரில் எட்மன்டன் நகரின் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரிக்கு வந்தார் திருத்தந்தை. அங்கு இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இச்செவ்வாய் தின திருத்தந்தையின் பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன. ஜூலை 29, வருகிற வெள்ளியன்று கனடாவில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, 30ம் தேதி காலையில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்