தேடுதல்

மூவேளை செப உரை 030722 மூவேளை செப உரை 030722 

உக்ரைனில் போர் நிறுத்தப்படுமாறு திருத்தந்தை மீண்டும் அழைப்பு

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், உரையாடல் வழியாக வருங்காலத் தலைமுறைகளுக்கு சிறந்ததோர் உலகைக் கட்டியெழுப்ப நாடுகளின் ஞானமுள்ள தலைவர்களுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் நிறுத்தப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 03, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியபின்னரும் அழைப்புவிடுத்தார்.

உலகிற்கு அமைதி தேவைப்படுகிறது. உக்ரைனிலும், உலகெங்கிலும் அமைதி நிலவுமாறு தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் எனவும், போரிடும் இருதரப்புகளும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாலோ அல்லது, ஒருவர் ஒருவர் மீது அச்சம் கொள்வதாலோ அமைதியை எட்ட முடியாது எனவும் உரைத்த திருத்தந்தை, இத்தகைய யுக்தி, கடிகாரத்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் திருப்புவதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

போர், மற்றும், காழ்ப்புணர்வை வலியுறுத்தும் போக்கிற்கு எதிராய்ச் செயல்படுமாறு, நாடுகளின் தலைவர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அழைப்புவிடுக்கிறேன் என்றும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், உரையாடல் வழியாக வருங்காலத் தலைமுறைகளுக்கு சிறந்ததோர் உலகைக் கட்டியெழுப்ப நாடுகளின் ஞானமுள்ள தலைவர்களுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இது, கடவுளின் உதவியோடு எப்போதும் இயலக்கூடியதே, எனினும், போரிடும் சக்திகள் மத்தியில் பிளவுண்டு இருக்கின்ற ஒரு சூழலில், ஒருவரையொருவர் மதிப்பதில் ஒன்றிணைந்த ஓர் உலகு நோக்கிச் செல்ல நாடுகள் எடுத்துக்காட்டாய் விளங்கமுடியும் என்றும் உரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

உக்ரைனில் போரை அதிகரிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும், போரை எதிர்ப்பதற்கு சொல்திறனைப் பயன்படுத்துவதை விடுத்தும், அரசியல், பொருளாதாரம், மற்றும், இராணுவ சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட யுக்திகளிலிருந்து வெளியேறியும், உலகளாவிய அமைதிக்கான ஒரு திட்டம் நோக்கியும் நாடுகள் செல்லவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2022, 12:40