தேடுதல்

எட்மன்டன் நகரின் காமன்வெல்த் அரங்கில் திருத்தந்தை

நமக்கு முன்னே வாழ்ந்த மற்றும், வாழ்ந்து கொண்டிருக்கிற தாத்தாக்கள், பாட்டிகளின் அனுபவத்தின் நினைவு எப்போதும் நம்மில் பசுமையாக நிலைத்திருக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

தாத்தாக்கள், பாட்டிகள், திருஅவையின் விலைமதிப்பற்ற சொத்துக்கள். அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை வழங்குபவர்கள். நமக்கு முன்னே வாழ்ந்த மற்றும், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிற அவர்களின் அனுபவத்தின் நினைவு எப்போதும் நம்மில் பசுமையாக நிலைத்திருக்கவேண்டும். அன்பு நெஞ்சங்களே, ஜூலை 26, இச்செவ்வாயன்று கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, இயேசுவின் தாத்தா பாட்டியான புனிதர்கள் அன்னா சுவக்கின் விழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். கனடா நாட்டில் தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 26, இச்செவ்வாயன்று கனடா நாட்டின் எட்மன்டன் நகரிலும், Lac Ste. Anne என்ற திருப்பயண புனித இடத்திலும் தனது பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார். கனடாவின் எட்மன்டன் நகர நேரத்திற்கும், இந்திய-இலங்கை நேரத்திற்குமான கால இடைவெளி 11 மணி 30 நிமிடங்களாக இருப்பதால், நம் ஒலிபரப்பில் முந்தைய நாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

ஜூலை 26, இச்செவ்வாய், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டில் பயணத் திட்டங்களை நிறைவேற்றிவரும் “தவத் திருப்பயணத்தின்” இரண்டாம் நாள். இந்நாளில்  உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இச்செவ்வாய் இரவு 8.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எட்மன்டன் நகரின் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியிலிருந்து 4.7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்ற காமன்வெல்த் அரங்கத்திற்கு காரில் சென்றார். இந்த அரங்கம், எட்மன்டன் நகரின் மையப் பகுதிக்கு சற்று தொலைவில் ஏறத்தாழ 42 ஏக்கர் அளவில், 56,400 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எட்மன்டன் Elks கால்பந்து கழகத்திற்குச் சொந்தமான இந்த மிக அழகான அரங்கத்தில், முக்கிய விளையாட்டுப் போட்டிகள், மற்றும், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. செங்கல் நிலம் எனவும் அழைக்கப்படும் இந்த அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் 1975ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1978ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இந்த காமன்வெல்த் அரங்கம், கனடாவின் மிகப்பெரிய அரங்கமுமாகும்.

இந்த பரந்த திறந்தவெளி அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றவிருந்த திருப்பலியில் பங்குகொள்வதற்காக ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் அமர்ந்திருந்தனர். இம்மக்கள் மத்தியில், திறந்த குண்டுதுளைக்காத காரில் வலம்வந்து திருப்பலி மேடைக்குச் சென்று, புனிதர்கள் அன்னா சுவக்கின் விழா திருப்பலியை ஆங்கிலம் மற்றும், இலத்தீன் மொழிகளில் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் கனடாவின் பூர்வீக இனத்தவரின் மரபிலும் பாடல்கள் இடம்பெற்றன. பொதுவாக இம்மக்கள் ஆடலோடு சேர்த்தே பாடுவார்கள்.

தாத்தாக்கள் பாட்டிகள், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கிறிஸ்தவ நம்பிக்கையை வழங்கும் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருக்கின்றனர், நீங்கள் அனைவரும் உங்களின் தாத்தாக்கள் பாட்டிகளை நினைத்துப் பாருங்கள் என்று, தாத்தாக்கள் பாட்டிகளின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருப்பலியில் மறையுரை ஆற்றினார். உங்களின் வருங்காலத்தைப் பாதுகாப்பதற்கு, உங்களின் வரலாற்றைப் பேணிக்காத்துக்கொள்ளுங்கள். கடவுளின் உதவியோடு எதையும் நம்மால் ஆற்ற இயலும் என்றுரைத்த திருத்தந்தை, கனடா வரலாற்றில் நம் பூர்வீக இனங்களின் சகோதரர், சகோதரிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறை மற்றும், புறக்கணிப்புகளால் அவர்கள் அதிகமான துயரங்களை எதிர்கொண்டுள்ளனர், அத்தகைய சூழல், வருங்காலத்தில் இனிமேல் ஒருபோதும் இடம்பெறக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்திருப்பலியின் இறுதியில், எட்மன்டன் பேராயர் ரிச்சர்டு வில்லியம் ஸ்மித் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2022, 12:03