தேடுதல்

திருத்தந்தையுடன் அருள்பணி.Guillermo Marcó. திருத்தந்தையுடன் அருள்பணி.Guillermo Marcó.  

திருத்தந்தை : மகிழ்வுடன் எனது முதுமையை கழிக்கிறேன்

வாய்ப்புகளை இழக்காமல் வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கு, தூய ஆவியானவர் நற்கனிகள் பலவற்றைக் கொடையாக வழங்குகின்றார் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது,  இதுகுறித்து நான் செபித்துவிட்டு, பிறகு  உங்களுக்குப் பதில் கூறுகிறேன் என்று தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயராக இருந்தபோது பலமுறை கூறியுள்ளார் என்று, அருள்பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி, திருத்தந்தையோடு தான் மேற்கொண்ட உரையாடல் ஒன்றை இம்மாதம் ஜூலை 3-ஆம் தேதி, இணையதளத்தில் வெளியிட்டுள்ள அருள்பணியாளர் Guillermo Marcó அவர்கள், அவ்வுரையாடலில் திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினாவிலுள்ள Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் பேராயராக தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணியாற்றியபோது, அவருடைய செய்தித் தொடர்பகத்தில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றியவர் அருள்பணியாளர் Guillermo Marcó.

தனது மந்தையை கவனித்துக்கொள்வதுதான் ஓர் ஆயரின் செபமாக இருக்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது அதே வழியைப் பின்பற்றுகிறார் என்றும், செபிப்பதற்கு நீங்கள் அதிகாலையிலேயே எழுந்துவிடுவீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ஆம், இல்லையென்றால் அதிகமான பணிகளின் மத்தியில் நீங்கள் எப்போதும் செபிக்கவே முடியாது என்று கூறியதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணியாளர்  Marcó

நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "நெருக்கடிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று தனக்குத் தெரியவில்லை என்றும், ஆனால், நெருக்கடிகள்தான் நம்மை வளரச் செய்கின்றன என்பது இங்கு, தான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று" என்றும், திருத்தந்தை தெரிவித்ததாக அருள்பணியாளர் Marcó கூறியுள்ளார்.

இறுதியாக, பிப்ரவரி 23-ஆம் தேதி முதல், முதுமை குறித்த பொது மறைக்கல்வி உரையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் நிலையில், உங்கள் வாழ்க்கையின் இந்த இறுதிக் கட்டத்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதை அறிய விரும்புவதாக அவர் வினா எழுப்பியபோது,  “இந்த வயதில், நான் என்னைப் பார்த்து புன்னகையோடு முன்னேறுகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Marcó

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2022, 14:49