கடந்ததை மறந்து, புதியதை நோக்கி முன்னேறிச் செல்வோம்-திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கனடாவின் குவேபெக்கிலுள்ள Notre-Dame பெருங்கோவிலில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், குருமாணவர்கள், மற்றும், மேய்ப்புப் பணியாளர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை
ஆயர்களே, அருள்பணியாளர்களே, திருத்தொண்டர்களே, துறவறத்தாரே, குருமாணவர்களே, மேய்ப்புப் பணியாளர்களே! திருஅவையின் மறைப்பணியாளர்களாகிய நாம், ஒவ்வொருவரின் மீதும் இயேசுவின் அக்கறையையும், ஒவ்வொருவரின் காயங்கள் மீதும் அவருடைய இரக்கத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில், மக்களாகிய நமது மந்தையை மேய்ப்பதில் இயேசுவிடம் விளங்கிய மனநிலையைக் கொண்டிருப்போம்.
நம்மையே நாம் உற்றுநோக்குவதற்கு முன்பு, நல்மேய்ப்பராகிய கிறிஸ்துவை நாம் உற்றுநோக்கினால், இரக்கம் நிறைந்த கிறிஸ்துவில் நாமும் தூய்மையானவர்கள் என்பதைக் கண்டுகொள்வதுடன், நாம் அவரோடு மிகவும் நெருக்ககமாக இருக்கிறோம் என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும். இதுவே நமது பணியின் மகிழ்விற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்பிக்கையின் மகிழ்விற்கும் தோற்றுவாயாக அமைந்துள்ளது.
‘எதிர்மறையான மற்றும் ‘தெளிந்து தேர்தல் பார்வை’
நாம் வாழும் உலகத்தைப் பற்றி இரண்டுவிதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்றை ‘எதிர்மறையான பார்வை’ என்றும், மற்றொன்றை ‘தெளிந்து தேர்தல் பார்வை’ என்றும் நான் கூறவிரும்புகின்றேன். முதலாவதான எதிர்மறைப் பார்வையானது ‘உலகம் பொல்லாதது, இவ்வுலகில் பாவம் ஆட்சி செய்வதுடன், சிலுவைத் துயர்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன என்ற எதிர்மறையான கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது, இதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால், இதுவல்ல கிறிஸ்தவ வாழ்வு. நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துவதுபோல், உண்மையில் அது கடவுளின் வழி அல்ல என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
நாம் எதிர்மறையான பார்வைக்குப் பணிந்துவிட்டால், பிறருக்காக வாழும் வழியான மனுவுரு எடுத்தலை மறுத்துவிடுவோம், நம்மில் மனுவுரு எடுப்பதற்குப் பதிலாக, உண்மைத்தன்மையிலிருந்து தப்பி ஓடிவிட முயல்வோம். மேலும், நமது பலவீனங்களை மறைத்து, நமது இழப்புகளுக்காகப் புலம்பி அழுது, கடவுளை குறைகூறி, அவருக்கு எதிரான அவநம்பிக்கையில் வீழ்ந்துவிடுவோம்.
அதற்குப் பதிலாக, நல்லவற்றைத் தெளிந்து தேர்ந்து, விடாமுயற்சியுடன் அதைத் தேடிக் கண்டுபிடித்து, இறுதிவரை அதில் வாழ்ந்து வெற்றிகண்ட கடவுளின் புதிய பார்வையைக் கொண்டிருக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
இவ்வகையில், தெளிந்து தேர்தல் பார்வை, நம்பிக்கையின் மகிழ்வைப் பெறுவதில் நாம் எதிர்கொள்ளும் சிரமங்களை ஏற்றுக்கொண்டு, நற்செய்தி அறிவிப்பிற்கான புதிய ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது. மேலும், புதிய மொழிகள் மற்றும் வெளிப்படுத்துதலின் வடிவங்களைத் தேடவும், சில மேய்ப்புப் பணிக்கான முன்னுரிமைகளை மாற்றவும், மற்றும், அத்தியாவசியத் தேவைகளில் கவனம் செலுத்துதவும் நமக்கு வழிகாட்டுகிறது.
மூன்று சவால்கள்
இங்கே, உடன்பிறந்த உணர்வுநிலையில், இறைவேண்டல் மற்றும் மேய்ப்புப் பணியை செயல்படுத்துவதில் எதிர்நோக்கும் மூன்று சவால்களை உங்களுக்கு முன்வைக்க விரும்புகின்றேன். இயேசுவை பற்றி அறியவைப்பதே முதல் சவாலாக அமைகிறது. கிறிஸ்துவை இதுவரை சந்திக்காதவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க புதிய வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இயேசுவின் நற்செய்தி மக்கள் வாழும் இடங்களைச் சென்றடைவதற்கும், அதனைக் கேட்பதற்கும், அதுகுறித்து உரையாடுவதற்கும், மக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும் வாய்ப்புகளைக் கண்டறியும் திறன் கொண்ட படைப்பாற்றலுக்கு இச்சவால் அழைப்பு விடுக்கிறது.
சாட்சிய வாழ்வு இரண்டாவது சவாலாக அமைகிறது. மற்றவர்களுக்கு விடுதலையளிக்கும் ஒரு விடுதலை, பயன்கருதா இரக்கச் செயல், கிறிஸ்துவின் பரிவிரக்கம் ஆகியவற்றைக் குறித்து நமது வாழ்க்கையே பேசும்போதும், வெளிப்படுத்தும்போதும் நற்செய்தி திறம்பட அறிவிக்கப்படுதுகிறது என்பதை உணர்வோம்.
மூன்றாவது சவாலாக அமைவது உடன்பிறந்த உணர்வுநிலை. நாம் அனைவரும் உடன்பிறந்த உணர்வுநிலையில் ஒருவரையொருவர் அன்பு செய்யக் கற்றுக்கொள்ளவும், பொதுநலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கவும், நமக்கு கற்றுக்கொடுக்கும் சிறந்ததொரு கல்வித்தளமாக நமது கிறிஸ்தவ வாழ்வு அமைகிறது.
அனைவருடனும், பூர்வீக இனச் சகோதரர் சகோதரிகளுடனும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு சகோதரி மற்றும் சகோதரருடனும் உடன்பிறந்த உணர்வு நிலையை உருவாக்குவதற்கு இதுவே சிறந்த வழியாக அமைகிறது. ஏனென்றால், கடவுளின் உடனிருப்பு அவர்களின் ஒவ்வொருவர் முகத்திலும் பிரதிபலிக்கிறது.
இவைகளே, நான் உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய ஒரு சில சவால்கள். மனித முயற்சியால் மட்டுமல்ல, மாறாக, கடவுள் துணையாலும், நமது இறைவேண்டல்களாலும் மட்டுமே இத்தகைய சவால்களை நாம் எதிர்கொண்டு அவைகளை வெற்றிக்காண முடியும் என்பதை உறுதியாக நம்புவோம்.
கடந்துபோனவற்றில் நம் மனதைச் செலுத்தாமல், மகிழ்வுடன் புதியவற்றைநோக்கி முன்னேறிச் செல்வோம். என் இதயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கின்றேன்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்