கடந்தகால தவறுகளுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்: திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூலை 25, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் தனது திருத்தூதுப் பயணத்தின் முதற்கட்டமாக கனடாவின் முதல் நாடுகளின் இன்யூட் மற்றும் மெடிஸ் பூர்வீக இன மக்களைச் சந்தித்து அவர்களுக்கு வழங்கிய உரை.
மஸ்க்வச்சிஸ் உட்பட இம்மண்ணின் அன்பான அனைத்துப் பூர்வீக இன மக்களே, அன்பான சகோதரர் சகோதரிகளே! என்னுடைய துயரங்களை நேரில் பகிர்ந்துகொள்ளவும், கடவுளின் ஒப்புரவு, குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்திற்காக இறையருளை வேண்டவும், என் உடனிருப்பை உங்களோடு வெளிப்படுத்தவும், உங்களுக்காக இறைவேண்டல் செய்யவும் உங்கள் சொந்த நிலங்களுக்கு வந்துள்ளேன்.
உறைவிடப் பள்ளிகளில் இறந்த குழந்தைகளின் நினைவு உண்மையில் வேதனையானது. அதேவேளையில், ஒவ்வொரு குழந்தையும் அன்புடனும், மரியாதையுடனும், மாண்புடனும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய உழைக்குமாறு இச்சம்பவம் நம்மைத் தூண்டுகிறது.
இந்தக் கடந்தகால துயரங்கள் வழியாக, நீதி, ஒப்புரவு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வகையில், நாம் ஒன்றிணைந்து நடக்கவும், இறைவேண்டல் செய்யவும், பணியாற்றவும் விரும்புகிறோம். இதன் காரணமாகவே, எனது இந்த முதல் சந்திப்பு உங்களுடன் நிகழ்ந்திருக்கிறது.
கடந்ததை நினைவு கூர்வோம்
இன்றைய சந்திப்பு பழைய நினைவுகளையும் வலிகளையும் கொண்டு வரக்கூடும் என்பதையும், நான் பேசும்போதே உங்களில் பலருக்கு அது வருத்தங்களை ஏற்படுத்தலாம் என்பதையும் நான் உணர்கிறேன். இருந்தபோதிலும், இவற்றை நினைவில் கொள்வதே சரியானது. காரணம், மறதி அலட்சியத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் உறைவிடப் பள்ளி அமைப்பை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு மற்றும் உரிமைகோரல் கொள்கைகள், இந்த நிலங்களின் மக்களுக்கு எவ்வாறு பேரழிவை ஏற்படுத்தியது என்பதையும் நாம் நினைவில் கொள்வது அவசியம்.
இத்தகைய ஒருங்கிணைக்கும் கொள்கைகள் எவ்வாறு பூர்வீக இன மக்களைத் திட்டமிட்ட முறையில் ஓரங்கட்டுகின்றன; உறைவிடப் பள்ளிகளின் வழியாக உங்கள் மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் எப்படி இழிவுபடுத்தப்பட்டன மற்றும் ஒடுக்கப்பட்டன என்பதையும், குழந்தைகள் உடல், வாய்மொழி, உளவியல் மற்றும் ஆன்மிக முறைகேடுகளுக்கு உள்ளான விதம்; சிறுவயதிலேயே அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து எப்படி அழைத்துச் செல்லப்பட்டார்கள், அது எப்படி பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், தாத்தா பாட்டி மற்றும் பேரக்குழந்தைகளுக்கு இடையிலான உறவுகளை பாதித்தது என்று நீங்கள் என்னிடத்தில் கூறிய அனைத்தையும் நான் அறிவேன்.
வருத்தமுடன் மன்னிப்பு வேண்டுகிறேன்
எனது தவப்பயணத்தின் முதல் படியாக உங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பதற்காகவே நான் இன்று உங்கள்முன் நிற்கின்றேன். ஆழ்ந்த வருத்தத்துடன் மீண்டும் ஒரு முறை உங்களிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். வருந்தத்தக்க வகையில், பல கிறிஸ்தவர்கள் பூர்வீக இன மக்களை ஒடுக்கும் சக்திகளின் காலனித்துவ மனநிலையை ஆதரித்தமைக்காக நான் மன்னிப்பு வேண்டுகிறேன்.
அன்றைய அரசுகளால் ஊக்குவிக்கப்பட்ட கலாச்சார அழிவு மற்றும் வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் திட்டங்களில், திருஅவை மற்றும் மதச் சமூகங்களின் பல உறுப்பினர்கள் தங்கள் அலட்சியத்தால் ஒத்துழைத்த விதங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
பூர்வீக இனமக்களுக்கு ஆதரவளிப்போம்
இந்த மண்ணிலுள்ள கிறிஸ்தவர்களும் ஏனைய மக்களும் பூர்வீக இன மக்களின் அடையாளத்தையும் அனுபவத்தையும் ஏற்றுக்கொள்ளும், மற்றும் மதிக்கும் திறனில் வளர வேண்டும் என நான் விரும்புகின்றேன், இறைவேண்டல் செய்கின்றேன். இதனால் அம்மக்களை நன்கு அறியவும், அவர்களுக்கு மதிப்பளிக்கவும் உறுதியான வழிகளைக் கண்டறிய முடியும் என்பதும் எனது நம்பிக்கை, இதன் வழியாக, அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கக் கற்றுக்கொள்ளலாம்.
என் பங்கிற்கு, பூர்வீக இன மக்களுக்கு ஆதரவளிக்கும் அனைத்து கத்தோலிக்கர்களின் முயற்சிகளையும் நான் தொடர்ந்து ஊக்குவிப்பேன். கலந்துரையாடல்கள், கோரிக்கைகள், மற்றும் திருத்தூது உரைகள் எழுதுவதன் வழியாகவும் பல்வேறு நேரங்களிலும் சந்தர்ப்பங்களிலும் நான் இவற்றைச் செய்திருக்கின்றேன்.
நான் இங்கு உங்களுடன் உடனிருப்பதும், கனடா நாட்டு ஆயர்களின் அர்ப்பணிப்பும், இந்தப் பாதையில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்கான சான்றாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்