தேடுதல்

ஆயர்கள் பேராயத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 3 பெண்கள் ஆயர்கள் பேராயத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 3 பெண்கள்  

திருத்தந்தை : ஆயர்கள் பேராயத்திற்கு புதிதாக 3 பெண்கள் நியமனம்

புதிய ஆயர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடும் ஆயர்கள் பேராயத்திற்கு மூன்று பெண்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலக அளவில் வருங்கால ஆயர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ள திருப்பீட  ஆயர்கள் பேராயத்திற்கு முதன்முறையாக மூன்று பெண்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 13, இப்புதனன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் திருத்தந்தையின் இந்தப் புதிய நியமனங்கள் வெளியாகியுள்ளன.

வத்திக்கான் நகர் நிர்வாகத் தலைமையகத்தின் தலைமை செயலராகப்  பணியாற்றிக்கொண்டிருந்த F.S.E சபையை சேர்ந்த அருள்சகோதரி ரஃபேலா பெத்ரினி, சலேசிய அருள்சகோதரிகள் சபையின் முன்னாள் தலைமை அன்னை அருள்சகோதரி Yvonne Reungoat,  கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் உலக ஒன்றியத்தின் தலைவர் முனைவர் Maria Lia Zervino ஆகிய மூவரையும் நியமனம் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் இவர்களில், Maria Lia Zervino என்பவர் திருப்பீட நிர்வாகப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் பொதுநிலையினர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதத்தில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரிகையாளர் Philip Pullela மேற்கொண்ட நேர்காணலில், திருப்பீடத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்து அவர் கேள்வி எழுப்பியபோது, புதிய ஆயர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆயர்கள் பேராயத்திற்கு இரண்டு பெண்களை நியமிக்க உள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியிருந்த நிலையில் இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2022, 14:21