பத்திரிகையாளர் Eugenio Scalfari மறைவிற்கு திருத்தந்தை இரங்கல்
மெரினா ராஜ் : வத்திக்கான்
பரந்துபட்ட அறிவும், துணிவும், எதையும் வெளிப்படையாக எடுத்துரைக்கும் குணமும் கொண்ட Eugenio Scalfari அவர்களின் மறைவுக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 14, இவ்வியாழனன்று இறைபதம் சேர்ந்த L'Espresso, La Repubblica, என்னும் இரு நாளிதழ்களின் இணைநிறுவனரான Eugenio Scalfari அவர்களுடன் தான் கொண்டிருந்த நட்புறவை நினைவுகூர்ந்து பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
இறைப்பற்று, அசாதாரண அறிவு, மற்றும், செவிமடுக்கும் திறன்கொண்ட Scalfari அவர்கள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், அனுபவங்கள், புத்தக வாசிப்பு மற்றும் தியானம் மூலம் எதிர்கால வாழ்வைப் பார்த்தவர் என்றும், அறிவியலில் ஆர்வமும் அன்பும் கொண்ட அவரின் இனிமையான, தீவிரமான உரையாடல்களை தன் மனதில் இன்றும் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
அமைதியின் பாலமாக, உறுதியான நட்புறவுப் பாதையின் ஊற்றாக, மனிதர்கள் மற்றும் நாடுகளுக்கிடையில் திகழ்ந்த Scalfari அவர்களின் மறைவு குறித்து வருந்துபவர்களுக்கு தன் ஆறுதலை வழங்குவதுடன், அவரின் ஆன்மா நிறையமைதியடையத் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்