கனடா திருத்தூதுப் பயணத்திற்கு உதவியவர்களுக்கு நன்றி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஜூலை 31, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம், பொருளாசையால் உருவாகும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கைவிடுத்தபின்னர், தனது அண்மை கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணம் பற்றியும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கனடாவில் தவத் திருப்பயணமாக, தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் நன்முறையில் இடம்பெற உதவிய, அரசு அதிகாரிகள், பூர்வீக இனங்களின் தலைவர்கள், ஆயர்கள் ஆகியோர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, இப்பயண நாள்களில் தங்களின் செபங்களால் என்னோடு உடன்பயணித்த எல்லாருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
ஜூலை 29, இவ்வெள்ளியன்று நிறைவுசெய்துள்ள, கனடா திருத்தூதுப் பயணம் குறித்து, ஆகஸ்ட் 3, வருகிற புதன்கிழமை பொது மறைக்கல்வியுரையில் விரிவாகப் பேசுவேன் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
உக்ரைன் மக்களுக்காக இறைவேண்டல்
கனடாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, உக்ரைன் நாட்டு மக்கள் பற்றியும் நினைத்துக்கொண்டிருந்தேன் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரின் கொடுமையிலிருந்து அந்நாட்டு மக்களைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் மன்றாடினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் அமைதியைக் கொணர உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு கடவுள் ஞானத்தை அருள்வாராக என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இயேசு சபையினருக்கு வாழ்த்து
இன்னும், ஜூலை 31, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட புனித இலொயோலா இஞ்ஞாசியார் விழாவோடு, புனித இஞ்ஞாசியார் யூபிலி ஆண்டு நிறைவுபெறுவதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேரார்வம் மற்றும், மகிழ்வோடு, ஆண்டவருக்குத் தொடர்ந்து பணியாற்றுமாறு இயேசு சபை தன் உடன்பிறப்புக்களை வாழ்த்தினார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்