தோல்வியிலிருந்து நம்பிக்கையை நோக்கிய பயணம்.
மெரினா ராஜ். வத்திக்கான்
லூக்கா நற்செய்தியின் இறுதியில் இடம்பெறும் எம்மாவு பயணம் நமது தனிப்பட்ட வாழ்விற்கும் திருஅவைக்கும் அடையாளமாகத் திகழ்கின்றது. நமது வாழ்க்கையின் நம்பிக்கை பாதையில் நமது கனவுகள், உள்ளத்தின் ஆழமான நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் போன்றவற்றை அடைய பலவீனங்கள் மற்றும் துன்பங்களிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். நமது தோல்விகளினாலும் கடந்தகால அனுபவங்களினாலும் பல நேரங்களில் சிறைக்குள் அடைபட்டு இருப்பது போல முடங்கிப் போகின்றோம். இந்த நேரங்களில் நாம் தனியாக இல்லை இயேசு நம் அருகில் உடன்பயணிக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது. இயேசு நம்முடன் பயணித்து கண்களை திறக்கச் செய்து, உள்ளத்தைப் பற்றி எரியச்செய்து, நம்மோடும் பிறரோடும் அவரோடும் திருஅவையோடும் ஒப்புரவாகச் செய்கின்றார்.
இயேசுவின் இறப்புக்குப் பின் துன்பத்தினால் துவண்டவர்களாய் தங்களின் எதிர்பார்ப்பு அனைத்தையும் இயேசுவின் மேல் வைத்து, அவரது கொடூர இறப்பிற்கு பின் ஏமாற்றமடைந்தவர்களாய், இயல்பு வாழ்க்கையை வாழ எம்மாவு நோக்கி சென்று கொண்டிருக்கும் இரண்டு சீடர்களைப் பற்றியது இன்றைய நற்செய்தி. மெசியாவின் பாடுகள் வழியாக அவர்கள் பெற்ற துன்ப அனுபவங்களை மனதில் சுமந்து குற்றவாளிகள் போல துன்பமுடன் பயணம் செய்யும் அவர்களின் முகங்கள் வருத்தமாய் சோகமாய் இருக்கின்றன. சோகமாய் என்பதன் வழியாக சீடர்களின் மகிழ்வான எதிர்பார்ப்புகள் வீணாகிவிட்டன, உறுதியான நம்பிக்கைகள் சிதைந்து விட்டன கனவுகள் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டன என வெளிப்படுத்துகிறார் நற்செய்தியாளர் லூக்கா.
இவர்களின் இந்த பயண அனுபவம் நமது வாழ்க்கைக்கும் ஆன்மீக பயணத்துக்கும் மிகவும் பொருந்தும் வேளையில், தோல்விகள் குழப்பங்கள் தெளிவின்மைகள் போன்றவற்றால் நமது எதிர்பார்ப்புக்களை மதிப்பீடு செய்ய முடியாமல் நாம் நொறுக்கப்படுகின்றோம். நமது உயர்ந்த இலட்சியங்கள் என்னும் வாழ்க்கை இலக்குகளை பலவீனம், மற்றும் நம்பிக்கை குறைவினால் கைவிடுகின்றோம். தூய பவுல் சொல்வது போல நன்மை செய்ய விருப்பம் என்னில் இல்லாமல் இல்லை அதைச்செய்யத்தான் முடியவில்லை என்ற வரிகளுக்குகேற்ப அன்றாட வாழ்க்கையில் அருகில், தொலைவில், உறவில், உணர்வில், அனுபவம், தவறு தோல்வி என அனைத்திலும் பாவங்களால் நசுக்கப்பட்டு குற்ற உணர்வுடன் வாழ்கின்றோம்.
சோதனையில் விழாதவாறு
முதல் வாசகத்தில் ஆதாம் ஏவாள் இத்தகைய உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு கடவுளிடமிருந்து மட்டுமல்ல தங்களிடமிருந்தும் விலகி ஒருவர் மற்றவரைக் குற்றம்சாட்டத் தொடங்குகின்றனர். இதேபோல் இயேசுவின் சீடர் குழுவை அடையாளப்படுத்தும் எம்மாவு சீடர்கள் இருவரும் இயேசுவின் மேல் தாங்கள் வைத்த நம்பிக்கை பலிக்காமல் போனது பற்றி குறைகூறிக் கொண்டு செல்கின்றனர். நாம் உயிர்த்த இயேசுவின் குழுவைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும், நம்முடைய ஏமாற்றங்களிலும் குழப்பங்களிலும் தீயோனின் சோதனையிலும் கல்வாரி துன்பத்தை காண்கின்றோம். அதிலிருந்து மீண்டு வர என்ன, ஏன், எப்படி நடந்தது என்று நமக்குள் நாம் கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்.
எம்மாவு சீடர்கள் போல சோதனையில் விழாதவாறு கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் நிகழ்வு நடந்த இடத்தை விட்டு அகன்று, அடைக்கலம் தேடி எம்மாவு நோக்கி தப்பி செல்ல நினைத்தனர். துன்பம் வரும்போது அதை விட்டு தப்பி ஓட நினைப்பது மிக மோசமானது. மாறாக துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும். தீயோனிடமிருந்து வரும் இச்சோதனை,துன்பங்கள், நமது ஆன்மீகப்பயணத்தை திருஅவையை, பாதித்து, இத்துன்பங்களிலிருந்து ஒருபோதும் மீண்டு வரமுடியாது, எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையற்ற தன்மையை வளர்க்கின்றன. நமது ஏமாற்றம், துயரம், தீயோனின் தூண்டுதலால் செய்யும் பாவம், போன்றவற்றால் நம்முடைய அருள்வாழ்வின் நீர் வற்றிப்போய், எதுவும் செய்ய முடியாது எனும் நிலையிலும் இயேசு நம்மோடு உடன் நடக்கின்றார். எவ்வாறு தடம்புரண்டு வருத்தமுற்று, தெளிவற்ற பாதையை நோக்கி பயணம் மேற்கொண்ட எம்மாவு சீடர்களின் பயணத்தில் உயிர்த்த இயேசு துணை நடந்தாரோ அதுபோல, நமது பாதையிலும் அவர் உடன் நடக்கின்றார்.
உற்சாகமூட்டும் வார்த்த்தைகளை, எளிமையான ஆறுதல் வார்த்தைகளை அவர் தரவில்லை மாறாக, தனது இறப்பின் மறையுண்மையை உயிர்ப்பின் ஆற்றலை, மறை நூல் வழியாக வெளிப்படுத்தி, அவர்கள் பெற்ற அனுபவத்திற்கும் நிகழ்விற்கும் புதிய ஒளி கொடுக்கின்றார். புதியதாக அனைத்தையும் காண, வாழ்விற்கும் கண்களுக்கும் ஒளி கொடுக்கின்றார். இறுதியாக அப்பம் பிடுவதன் வழியாக, கடவுளின் அன்பிற்கிணங்க நண்பர்களுக்காக உயிரை அர்ப்பணித்த தன்னை யாரென்று வெளிப்படுத்தி தோல்வியிலிருந்து நம்பிக்கை நோக்கிய மகிழ்வின் பயணத்தை தொடங்க, நம் ஒவ்வொருவருக்கும் திருஅவைக்கும் உதவுகின்றார்.
நம் வாழ்வின் மையம் இயேசு
நமது கண்கள் திறக்கப்பட, உள்ளம் மறை நூலினால் பற்றி எரியப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?. ஆன்மீக மற்றும் பொருள் சார்ந்த முயற்சிகளை சகிப்புதன்மையோடு எதிர்கொள்ள, நேர்மையோடு கூடிய உடன்பிறந்த சமுக உறவுப்பாதையை தேட, நமது ஏமாற்றங்கள் துயரங்களிலிருந்து மீண்டு வர கடந்த கால காயங்களிலிருந்து குணமாக கடவுளோடும் பிறரோடும் ஒப்புரவாக நாம் என்ன செய்யவேண்டும்? இப்படி நம்முள் பல கேள்விகள். இக்கேள்விகளுக்கு பதிலாக பாதையாக அமைவது வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்று கூறிய இயேசு ஒருவரே. அவர் நம்மோடு பயணிப்பதை நம்பி, அவரை எதிர்கொண்டு சந்திக்க, அவரது வார்த்தைகள் நமது வாழ்வை வரலாற்றை ஊடுறுவ, நம் காயங்களை குணப்படுத்த தனிப்பட்ட விதத்திலும் திருஅவை அளவிலும் அனுமதிக்கவேண்டும். இந்த நம்பிக்கையில் நாம் பெற இருக்கும் கிறிஸ்துவின் திருஉடல் நம்மை ஒரே மேசையில் அமர்ந்து உண்ணும் கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகின்றது.
பெண் சீடர்கள் உயிர்ப்பின் நற்செய்தியை முன்னதாகவே அறிவித்தபோதிலும், அதை நம்பாத எம்மாவு சீடர்கள் இயேசுவால் அப்பம் உடைக்கப்படும் போது அதை உணர்ந்து அவரைக் கண்டுகொள்கின்றனர். இறைவனின் தாயாம் கன்னிமரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலில் இருக்கும் நாம் இறைவனின் மீட்புத்திட்டத்தில் பெண்கள் இடம்பெற்றிருப்பதை கட்டாயம் நினைவுகூற வேண்டும். புனித கன்னி மரியா அவரின் தாய் புனித அன்னா, உயிர்ப்பு செய்தியை அறிவித்த பெண்கள் போன்றோரின் தாயன்பு ஒப்புரவிற்கான புதிய பாதையை நமக்கு காட்டி, பலன்தரும் புதிய வாழ்விற்கான பாதையில் அழைத்துச் செல்கின்றது. கடந்த கால துன்பம், இறப்பு, போன்றவற்றை விடுத்து, நமது கேள்விகள், உள்மனத்தடைகளை மையப்படுத்தாமல், இயேசுவை அவரது வார்த்தையை மையமாக வைத்து வாழ முயற்சிக்க வேண்டும். அவரது வார்த்தை நம் வாழ்வின் மையமானால் நம்முடைய குழப்பமான நம்பிக்கையற்ற சூழலில் கடவுளின் அன்பும் நன்மைத்தனமும் தெளிவாக விளங்கும்.
இன்று நம் நடுவில் மீண்டும் தன் உடலை அப்பம் மூலம் பகிர இருக்கும் இயேசு, நம் பலவீனங்களை தழுவி, நம் பாதைகளை செம்மையாக்கி, உள்ளத்தைக் குணப்படுத்துகின்றார். இதனால் கடவுளோடும்,பிறரோடும் நம்மோடும் ஒப்புரவாகி அமைதி மற்றும் ஒப்புரவின் கருவிகளாக சமூகத்தில் மாறுகின்றோம். மாலை நேரம் ஆகின்றது எம்மோடு தங்கும் இயேசுவே என்று கூறிய எம்மாவு சீடர்களைப் போல நாமும் இயேசுவை நம்முடன் இருக்க அழைப்போம்.
வழியும் ஆற்றலும் ஆறுதலுமான இயேசுவே
நம்பிக்கை இழந்து ஏமாற்றங்களின் இரவில் தள்ளப்படும் போது எம்மோடு தங்கும். மூடநம்பிக்கைகளின் மாயமகிழ்விலிருந்து மீண்டு புதியபயணத்தை உம்மோடு தொடங்க எம்மோடு தங்கும். எமது துன்பமான இரவுகள் ஒளிபொருந்திய காலையாக மாற எம்மோடு தங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நீர் எம் அருகில் நடந்தால் தோல்விகள் நம்பிக்கையின் புதிய பாதைகளை தரும் என்பதை முழுமையாக நம்புகின்றோம். ஆகவே எம்மோடு தங்கும் இயேசுவே ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்