வாழ்க்கை விளக்கு சுடர்விட்டு எரிய மூன்று வழிகள்.
மெரினா ராஜ் . வத்திக்கான்
ஜூலை 29 இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் IQALUIT ல் முதியோர் மற்றும் இளைஞர்களை சந்தித்த போது அளித்த செய்தி. இம்மண்ணில் விடுதிப்பள்ளிகளின் வருகைக்கு முன்பு பூர்வீக இனமக்களின் குடும்ப பிணைப்பு எவ்வாறு இருந்தது என்பது பற்றி முதியவர் ஒருவர் என்னிடம் பகிர்ந்த கருத்துக்களைக் கொண்டு எனது உரையைத் துவங்குகின்றேன். தாத்தாக்கள் பாட்டிகளோடும் பெற்றோர்களோடும் குழந்தைகள் மகிழ்வாக வாழ்ந்து வந்த காலம், வசந்த காலத்தில் தங்களின் தாய்ப்பறவை அருகில் மகிழ்ந்து பாடும் இளம் சிட்டுக்களின் கூட்டம் போல காட்சிஅளித்தது. திடிரென்று அந்த இளம் உள்ளங்கள் தங்களது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதும் எப்போதும் குளிர்காலத்தை கொண்டதாக இந்த நிலம் வெறுமையாக மாறிப்போனது. இக்கதை நமக்கு வலியை மட்டுமல்லாது வருத்தத்தையும் தருகின்றது.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ் நாட்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும் தாயையும் மதித்து நட என்னும் திருவிவிலியம் கூறும் கட்டளைகளை கடைபிடிக்க முடியாதவாறு இங்குள்ள குழந்தைகள் தங்களின் பெற்றோர்,இனம்,நாடு,மொழி,கலாச்சாரம் என அனைத்திலிருந்தும் பிரிக்கப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். தனது மூதாதையரின் உரிமைச் சொத்தை அதனை பறிக்க நினைத்த அதிகாரிகளிடமிருந்து காப்பாற்ற நினைத்த நீதிமானான நாபோத்தின் நினைவு வருகின்றது. பெற்றோர் குழந்தைகளின் பிணைப்பை உடைப்பதும் நெருங்கிய உறவுகளை சிதைப்பதுமே இயேசு கூறும், சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்தல் என்பதாகும்.
ஒப்புரவு அமைதி மற்றும் குணப்படுத்துதலின் ஒன்றிணைந்த பயணத்தில் இருக்கும் நாம் படைத்த கடவுளின் துணையோடு நிகழ்காலத்தில் என்ன நடந்தது என்பதை வெளிச்சமாக அறிய, கடந்த கால இருண்ட வாழ்விலிருந்து மீண்டு வர முயற்சிப்போம். நீங்கள் பயன்படுத்தும் qullig எண்ணெய் விளக்குகள் குளிரினை போக்கி வெப்பம் ஒளி போன்றவற்றை தருவது போல நாமும் இருளை அகற்றி ஒளி எற்றுவோம். வாழ்வின் அடையாளமாக திகழும் விளக்கைப் போல, ஒளி கொண்டு இருளை விரட்ட முற்படுவோம். வாழும் இடத்தை அன்பு செய்து, மதித்து, தலைமுறை தலைமுறையாக மகிழ்ந்து வாழும் NUNAVUT, INUIT, NUNAGAT மக்களாகிய உங்களுக்கும் இயற்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. உங்களைப் போலவே இயற்கையும் உறுதியானது நிலையானது ஒளி கொண்டு இருளை விரட்டுவது. நிலத்தைப் போலவே நீங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பராமரிக்கப்பட வேண்டியவர்கள்.
இயற்கையை பாதுகாக்க,கற்க,கற்பிக்க இன்றைய இளைஞர்களிடம் இக்குறிப்பிட்ட பணி ஒப்படைக்கப்படுகின்றது. முதியோர்களின் எடுத்துக்காட்டான வாழ்வையும் ஆலோசனைகளையும் ஆதாரமாகக் கொண்டு செயல்பட, பூமியை,மக்களை,வரலாற்றைக் காக்க சிறப்பான விதத்தில் அழைக்கப்படுகின்றார்கள். GOETH என்னும் கவிஞர் கூறுவது போல உன்னுடைய தந்தையின் உரிமைச் சொத்து உனதாவதற்கு முன்பு அது உன்னால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கிணங்க கடந்த காலத்தில் கிடைத்ததை பாதுகாப்பது மட்டுமல்ல புதிதாக உருவாக்குவதும் நமது கடமை என்று உணர வேண்டும். வாழ்க்கை என்னும் விளக்கு சுடர்விட்டு எரிய நானும் ஒரு மூத்தவர் என்ற முறையில் மூன்று அறிவுரைகளை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.
1. முன்னோக்கி நடந்து செல்லுங்கள்
2. அனுதினமும் ஒளியை நோக்கி வாருங்கள்
3. குழுவின் ஒரு பகுதியாக இருங்கள்
முன்னோக்கி நடந்து செல்லுங்கள்
உங்களைப் பற்றி மட்டுமே நினைக்க, ஓய்வெடுக்க, விரும்பியதைச்செய்ய நாம் படைக்கப்படவில்லை. முன்னோக்கிச் செல்ல, கடவுளை அன்புசெய்ய, பிறருக்கு உதவ, மிக நேர்மையானவற்றை நாடிச்செல்ல, நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம். உங்களது கனவுகள் எட்டமுடியாத வானம் போல இருப்பதாக எண்ணி வருந்த வேண்டாம். நீங்கள் பறப்பதற்காக படைக்கப்பட்டிருக்கின்றீர்கள். உண்மையான துணிவு, நீதியின் அழகு கொண்டு இரக்கச்செயல்களை செய்ய, உறவுகளை கட்டி எழுப்ப, அன்பு மற்றும் அமைதியின் விதைகளை செல்லும் இடமெல்லாம் விதைத்து செல்ல நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம். இது பறப்பதை விட கடினம் என்று தோன்றினாலும் சில நேரங்களில் ஆன்மீக ஈர்ப்பு விசை காரணமாக நாம் கீழ் நோக்கி இழுக்கப்படுகின்றோம் என்பதே உண்மை. பூமியின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பறந்து செல்லும் முன் காலச்சூழல் ,தட்பவெப்பநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தனது பாதையை மாற்றி அமைக்கும் ஆர்க்டிக் பறவைகளைப் போல செயல்படவேண்டும். பாதையை மாற்றினாலும் நம்முடைய இலக்கு தெளிவானதாக இருக்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை உணர்ந்து சிலுவையில் இயேசு பட்ட பாடுகளை நினைத்து செபித்து, கடவுளைத் தேடி வரும்போது நாம் எந்த பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என அவர் வழிகாட்டுகின்றார். எனவே இளையோரே உங்கள் வாழ்க்கைப்பாதையின் தெளிவான இலக்கிற்கான திசைகாட்டியை இன்றே சரிசெய்து கொள்ளுங்கள்.
அனுதினமும் ஒளியை நோக்கி வாருங்கள்
வருத்தமாக, சோகமாக இருக்கும் போது அனுதினமும் ஒளி தரும் குயில்லிக் விளக்கு தரும் செய்தியை நினைவுகூருங்கள். ஒவ்வொரு நாளும் உலகிற்கு, கண்களுக்கு, புன்னகைக்கு நன்மைத்தனங்களுக்கு ஒளி கொடுக்க நம்மால் மட்டுமே முடியும் என வலியுறுத்தும் விளக்கு இருளுக்கு எதிரான போராட்டத்தை அனுதினமும் செய்ய வலியுறுத்துகின்றது. நன்றாக வாழ வேண்டுமானால் நற்பழக்கங்களால் நம்மை நிரப்ப வேண்டும் என கூறும் எண்ணெய் நிரம்பிய விளக்குகளால் மட்டுமே இச்செயல்களை செய்ய முடியும். ஒளி தரும் பட்டாசுகளும் வான வேடிக்கைகளும் புகையை மட்டுமே தரும். உங்கள் சொற்கள் தீமைக்கு “இல்லை” என்றும் நன்மைக்கு “ஆம்” என்றும் சொல்லும் சுதந்திர மன நிலை கொண்டதாக இருக்க வேண்டும். இத்தகைய தனித்துவமான சுதந்திர மனநிலையை பரிசாகக் கொடுத்த இறைவனை நற்செயல்களால் மகிழ்ச்சிப்படுத்தி அனுதினமும் ஒளியை நோக்கி வாருங்கள்.
குழுவின் ஒரு பகுதியாக இருங்கள்.
இளைஞர்களாகிய நீங்கள் வானத்து விண்மீன்கள் ஒன்றிணைந்து கண்ணுக்கு மகிழ்வைத் தருவது போல, தனியாக அல்ல ஒன்றிணைந்து செயல்களைச் செய்வதில் வல்லவர்கள். உங்களது இளமைக்காலம் தனிமையாக அலைபேசி மாயையில் மறைந்து விடாது ஒன்றிணைந்து உலகிற்கு ஒளிதரக்கூடிய செயல்களை செய்வதற்கு பயன்பட வேண்டும். கனடா நாட்டின் தேசிய விளையாட்டான ICE ஹாக்கி, குழு ஒற்றுமைக்கு சிறந்த அடையாளமாகத் திகழ்கின்றது. எப்படி ஒலிம்பிக்கில் எல்லா பதக்கங்களையும் கனடாவால் பெறமுடிகின்றது. SARA NURSE, MARY PHILIP POULIN போன்றோரால் எப்படி வெற்றிபெற முடிந்தது என்று சிந்தியுங்கள். படைப்பாற்றல், நல்லொழுக்கம், வியக்கத்தக்க முடிவுகள், விளையாட்டு நுணுக்கங்கள், உடல் ஆற்றல், குழு ஒற்றுமை, பொறுமை, ஒன்றிணைந்து செயல்படுவதால் ஏற்படும் பலன், கவனம், பயிற்சி என அனைத்தையும் கற்றுதருகின்றது விளையாட்டு. மற்றவர்களுக்கு இடமளித்தல், நம் முறை வரும்போது விரைந்து செயல்படுதல், குழுவினரை உற்சாகப்படுத்துதல் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்ட குழு விளையாட்டுக்கள் நம் வாழ்விற்கும் பல பாடங்களைக் கற்றுத்தருகின்றன.
ஆக முன்னோக்கி நடந்து அனுதினமும் ஒளி கொடுத்து குழுவின் ஒரு அங்கமாக இருந்து உங்களது கலாச்சாரத்தோடும் மொழியோடும் இணைந்து செயலாற்றுங்கள். முதியோர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கையையும் ஆலோசனைகளையும் ஆதாரமாகக் கொண்டு உங்களது வரலாற்றின் புதிய பக்கங்களை எழுதுங்கள் தனித்துவமான சுதந்திரம் கொண்டு கடவுளை மகிழ்வித்து இனுக் (INUK) கிறிஸ்துவை ஒவ்வொருவரிலும் கண்டு வாழ உங்களை மனதார வாழ்த்தி நன்றி கூறுகின்றேன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்