தேடுதல்

விமானத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திருத்தந்தை விமானத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திருத்தந்தை  

விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு

அக்காலத்தில் கனடாவில், பூர்வீக இன மாணவர் விடுதிப் பள்ளி அமைப்பு வழியாக அவ்வினத்தவரின் கலாச்சாரத்தை அழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், ஒரு கலாச்சார படுகொலை – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கனடா நாட்டிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிய விமானப் பயணத்தில், இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகளை சுடச்சுட உலகுக்கு அறிவித்த, பல்வேறு நாடுகளின் ஏறத்தாழ எண்பது செய்தியாளர்களில் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதில்களையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.  முதலில் கனடாவின் பூர்வீக இனத்தவரின் CBC வானொலியின் Jessica Ka'Nhehsíio Deer அவர்கள், அக்கால ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின்போது பூர்வீக இனத்தவரின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கேட்டார். இந்நாள்களில் நீங்கள் அனைவரும் கடுமையாகப் பணியாற்றி இருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றி என்று, தன் பதில்களைச் சொல்லத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்காலத்தில் கனடாவில் கத்தோலிக்கத் திருஅவை மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபைகளால் நடத்தப்பட்ட, பூர்வீக இன மாணவர் விடுதிப் பள்ளி அமைப்பு வழியாக பூர்வீக இனத்தவரின் கலாச்சாரத்தை அழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஒரு கலாச்சார படுகொலை. இப்பயண நிகழ்வுகளில் இச்சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை என்பது உண்மையே. அந்நேரங்களில் இது எனது மனதில் தோன்றவில்லை. திருஅவையின் அந்த படுகொலை நடவடிக்கைக்காக நான் மனம் வருந்தினேன், மன்னிப்பு கேட்டேன். குடும்ப உறவுகளை கடுமையாய்ச் சிதைத்த, மற்றும், புதிய கலாச்சார நம்பிக்கைகளை, அவ்வினத்தவரின் தலைமுறைகளுக்குப் புகுத்த முயற்சித்த அந்த அமைப்புமுறைக்கு எதிரான கண்டனத்தை நான் மீண்டும் மீண்டும் தெரிவித்தேன். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கால காலனி ஆதிக்கம் பற்றிப் பேசியபோது இக்காலத்தில் இடம்பெறும் காலனி முறைகள் பற்றியும் குறிப்பிட்டார். 1800களின் பிற்பகுதியிலிருந்து 1970கள் வரை, கனடாவின் பூர்வீக இனத்தவரை முழுவதும் கிறிஸ்தவர்களாகவும், கனடா நாட்டினராகவும் ஆக்குவதற்கு இடம்பெற்ற முயற்சியில் ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சிறார் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமைப் பணியிலிருந்து ஓய்வுபெறுதல், உடல்நலம் உட்பட இன்னும் சில கேள்விகளுக்கும் திருத்தந்தை பதிலளித்தார்.

முதுமைநிலை, பணி ஓய்வு பற்றி திருத்தந்தை

தனது முதுமைநிலை, நடப்பதற்குச் சிரமப்படுதல் போன்றவை, தனது பாப்பிறை தலைமைப்பணியில் ஒரு பதிய மற்றும், மெதுவான கட்டத்திற்கு உட்படுத்தியுள்ளன. கடுமையான உடல்நிலை பிரச்சனைகள் திருஅவையை நடத்துவதற்குத் தடையாக இருந்தால், அப்போது தனது தலைமைப் பணியிலிருந்து ஓய்வுபெறத் தயாராக உள்ளேன். இதற்கு முன்பு திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டதுபோல இனிமேலும் அவ்வாறு மேற்கொள்ள இயலாது என நினைக்கின்றேன். நான் எனது முழங்கால் மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பவில்லை. ஏனெனில் ஓராண்டிற்குமுன்னர் குடலில் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சைக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டதால் எதிர்கொள்ளும் நீண்டகால பின்விளைவுகளைத் தொடர்ந்து அதிகரிக்க விரும்பவில்லை.  தென் சூடான், காங்கோ மக்களாட்சி குடியரசு, லெபனோன், கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ள எனக்கு நல்மனது இருக்கிறது. எனது உடல்நிலை அவற்றுக்கு ஒத்துழைக்கின்றதா என்பதைப் பார்க்கவேண்டும். இவ்வாறு, 85 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானப் பயணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடுத்துரைத்தார்.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2022, 15:16