திருத்தந்தையின் கனடா தவத் திருப்பயணத்தின் இலக்குகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டுக்கு மேற்கொண்ட 37வது திருத்தூதுப் பயணத்தின் இலக்குகள் நிறைவேறின என உறுதியாகக் கூறலாம் என்று, வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குநரும், La Civiltà Cattolica இயேசு சபையினர் இதழின் எழுத்தாளருமான, இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜூலை 24, ஞாயிறு முதல், ஜூலை 29 இவ்வெள்ளி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா மண்ணில் நிறைவேற்றிய பயண நிகழ்வுகள் குறித்த தன் எண்ணங்களை வத்திக்கான் வானொலியிடம் பகிர்ந்துகொண்ட, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் முன்னாள் இயக்குநருமாகிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.
இத்திருத்தூதுப் பயணத்தின் நிகழ்வுகள் அனைத்தும், அப்பயணத்தின் நோக்கத்தோடு ஒத்திணங்கிச் செல்வதாயும், ஒற்றுமையை வெளிப்படுத்துவதாயும் இருந்தன, குறிப்பாக,
இப்பயணத்தின் இறுதி நிகழ்வாக, திருத்தந்தை Inuit பூர்வீக இன மக்களுக்கு ஆற்றிய பண்பாட்டுமயமாக்கல் பற்றிய உரை, தலைசிறந்த படைப்பு என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறியுள்ளார்.
நாம் சொற்களில் வல்லவர்களாக இருக்கலாம், ஆனால் அவற்றுக்குச் செயலுருவம் கொடுக்கவேண்டும் என்றுரைத்துள்ள அருள்பணி லொம்பார்தி அவர்கள், பண்பாட்டுமயமாக்கல் பற்றி திருத்தந்தை உரையாற்றியபோது, அதனை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்பதை தெளிவுற விளக்கியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை தன் உரைகளை, கனடாவில் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்ட நினைவுகளோடு ஒருங்கிணைத்து ஆற்றினார் எனவும், இது, அண்மை ஆண்டுகளில் திருத்தந்தையே புனிதர் நிலைக்கு உயர்த்திய கனடாவின் முதல் ஆயர் புனித பிரான்சிஸ் செ லாவல் குறித்தும், அக்காலத்தில் கனடாவில் முதலில் நற்செய்தியை விதைத்த கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்தும் கூறியபோது தெளிவாக வெளிப்பட்டது எனவும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறியுள்ளார்
கனடா சமுதாயத்தில் நிலவும் உலகாயுதப்போக்கு விவகாரம் குறித்த தெளிவான எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, திருஅவை ஒப்புரவை வரவேற்கும் ஓர் இல்லமாக இயங்கவேண்டும் என்றும், பழங்கால மற்றும், நவீனக் கூறுகளைக் கொண்டிருக்கும் கனடா, இக்காலப் பிரச்சனைகளுக்கும், சவால்களுக்கும் நன்றாகப் பதிலளிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார் என்றார், அருள்பணி லொம்பார்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்