கடவுளன்பின் நெருப்பை அனைவருக்கும் கொடுப்பவர்களாக......
மெரினா ராஜ் -வத்திக்கான்
மேய்ப்புப்பணியில் ஆர்வமுடனும், கடவுளின் எல்லையற்ற அன்பிற்கு சாட்சியாகவும் வாழ 20 புதிய கர்தினால்களுக்கும் அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கானாவின் புதிய கர்தினால் Richard Kuuia Baawobr அவர்களுக்காக இறைவேண்டல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் 27 இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை நான்கு மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இரவு 7.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் 20 புதிய கர்தினால்கள் நிலை ஏற்பு திருவழிபாட்டின்போது மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய கர்தினால்கள் அனைவரும் கடவுளின் எல்லையற்ற அன்பின் சாட்சிகளாக, வாழும் கடவுளின் அன்பின் நெருப்பாக, மற்றும், மென்மையான கனலாக வாழவும், இதற்காக உலக மக்கள் அனைவரும் செபிக்கவும் கேட்டுக்கொண்டார்.
கடவுளின் எல்லையற்ற அன்பின் நெருப்பு
குறிப்பிட்ட பணிக்கென அழைக்கப்பட்ட ஒவ்வொருவரிடத்திலும் இயேசு எரியும் தீப்பந்தத்தைக் கொடுத்து, இதை எடுத்துக்கொள்ளுங்கள், தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்ற இறைவார்த்தைகளைக் கூறி, செயல்பட அழைக்கின்றார் எனவும், இதன் வழியாக மேய்ப்புப்பணியினை ஆற்றும் உறுதியையும், ஒவ்வொரு மனிதரும் மீட்கப்பட வேண்டும் என்ற துணிவையும், எந்த எதிர்பார்ப்பும் வரையறையும் இன்றி நமக்குத் தருகின்றார் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறைத்தந்தையின் இரக்கத்தால் பற்றி எரியும் அவரது திருஇதயத்தின் நெருப்பிலிருந்து பெருந்தன்மை, எல்லையற்ற, அதேவேளை நிபந்தனையற்ற அன்பு, உலக மக்கள் எல்லாருக்கும் அவரைப் பற்றி அறிய காரணமான அவரது திறந்த மனம் போன்றவற்றை நம்மிடம் பகிர விரும்புகின்றார் எனவும், இந்நெருப்பே, இயேசுவால் இவ்வுலகிற்கு கொண்டு வரப்பட்டு, அவரைப் பின்பற்றுபவர்களின் கை, கால்கள், இதயத்தில் பற்றி எரிந்து பணி செய்யத் தூண்டும் தூய ஆவியாரின் நெருப்பு என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மென்மையான கனல் நெருப்பாக...
இயேசுவின் அன்பு, நம்பிக்கை, அருகாமை, மென்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கனல் நெருப்பு போன்று அவரின் உடனிருப்பு நமது அன்றாட வாழ்வின் அரவணைப்பாக, ஊட்டமாக மாறி நம் நடுவில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மற்ற மதத்தினரிடையே தனியாக, உயிருள்ள இயேசுவின் உடனிருப்பை நற்கருணையிலும் இறைவார்த்தையிலும் பெற்று உடன்பிறந்த உணர்வோடு பணியாற்றிய புனித Charles de Foucauld அவர்களின் வாழ்வையும், விடாமுயற்சியுடன் தன்னலமற்ற பணியில் ஈடுபடும் அருள்பணியாளார்கள் மற்றும், துறவறத்தாரையும், குழந்தைகளை வளர்ப்பதன் வழியாக கடவுளின் அன்பின் சுடரை உயிருடன் வைத்திருக்கும் திருமணமான தம்பதிகளையும், தங்களது அனுபவப் பகிர்வு, நினைவு போன்றவற்றின் வழியாக சான்று வாழ்வு வாழ்ந்து குடும்பத்தையும் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் முதியோரின் பணியினையும் பாராட்டினார், திருத்தந்தை.
இறுதியாக, கடவுளின் இந்த நெருப்பின் துணைகொண்டு தூய்மை, உண்மை வழியில் மக்களை வழிநடத்திச் செல்ல கிறிஸ்து இயேசுவினால் அழைக்கப்பட்ட புதிய கர்தினால்களை வாழ்த்தி, கடவுளின் வாழும் அன்பின் நெருப்புக்கு எடுத்துக்காட்டுகளாக செயல்பட வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்