தேடுதல்

திருத்தந்தை: வரலாறு, கடவுளின் கரங்களில் உள்ளது

ஆண்டவர் எப்போதும் நம்மோடு பயணிக்கின்றார் என்ற உறுதியில், அஞ்சாமல் தொடர்ந்து வாழ்வுப் பயணத்தை மேற்கொள்ளுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

கடவுளில் ஆழமான பற்றுறுதி கொண்டிருக்கவும், நம் வாழ்வில் அவரது இருப்பு குறித்து எப்போதும் விழிப்பாய் இருக்கவும் வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 07, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (லூக்.12:35-40) மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம், ஆயினும் எப்போதும் விழிப்பாயிருங்கள்” என்று இயேசு தம் சீடர்களிடம் கூறியதை நினைவுபடுத்தினார்.

அஞ்சவேண்டாம்

கடவுளின் அன்பு மற்றும், அவரது பராமரிப்பு குறித்து தம் சீடர்களுக்கு எடுத்துரைத்தபின்னர் இயேசு இவ்வாறு கூறியிருக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, நம் வாழ்வு எப்போதும் கடவுளின் அன்பிலும், அவரது பராமரிப்பிலும் ஆழமாக வேரூன்றியிருந்தால், எதற்கும் நாம் அஞ்சத் தேவையில்லை, அதேநேரம், நாம் ஆழ்ந்து உறங்கும்போதுகூட ஆண்டவர் நம்மைக் கடந்துசெல்லக்கூடும் என்பதால், எந்நேரமும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

கவலைகள், மனச்சோர்வுகள், நம்பிக்கையின்மை, தோல்வி அல்லது அன்புகூரப்படவில்லை என்பது குறித்த அச்சம் போன்றவற்றால் வாழ்வில் முடங்கிக்கிடக்கும்போது, அவை நம்மீதும், போலியான பாதுகாப்பு உணர்வையளிக்கும் பொருள்கள் மற்றும், செல்வத்தைக் குவித்துவைப்பதன் மீதும் மட்டுமே கவனம் செலுத்த வைக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

நமக்கு உண்மையாகவே தேவைப்படும் அனைத்தையும் அளிப்பதற்கு விரும்புகின்ற இறைத்தந்தையில் நம்பிக்கை வைக்கவும், இத்தந்தை, நமக்கு ஏற்கனவே தம் திருமகனையும், அவரது இறையாட்சியையும் கொடுத்திருக்கிறார் எனவும், அவர் தமது அன்புப் பராமரிப்பால் ஒவ்வொரு நாளும் எப்போதும் நம்முடன் பயணிக்கிறார் எனவும் ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தயாராக இருங்கள், விழிப்பாயிருங்கள்

வாழ்வின் இன்பம், துன்பம் என எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், ஆண்டவர் நம்மிடம் ஒப்படைத்துள்ள நற்செயல்களை ஆற்றிய முறைகள், வாழ்வின் இறுதிநேரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ நம்பிக்கை, குடும்பம், உறவுகள், குழு போன்றவற்றிலிருந்து நாம் பெற்றுக்கொண்டவை குறித்து சிந்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆண்டவரிடமிருந்து நாம் பெற்ற கொடைகளைப் போற்றுகிறோமா அல்லது, மற்றவர் பற்றி நினைத்துப் பார்க்காமல் அவற்றை நமக்குள்ளே வைத்துக்கொள்கிறோமா என்பது குறித்து சிந்திக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் எப்போதும் நம்மோடு பயணிக்கின்றார் என்ற உறுதியில், அஞ்சாமல் தொடர்ந்து வாழ்வுப் பயணத்தைத் தொடருமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2022, 12:30