தேடுதல்

இயேசு சபையினருடன் திருத்தந்தை மேற்கொள்ளும் கலந்துரையாடல் இயேசு சபையினருடன் திருத்தந்தை மேற்கொள்ளும் கலந்துரையாடல்  

கனடா இயேசு சபையாளர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

"திருஅவை ஒன்றிணைந்து செயல்படும்போது, அங்கே அருளடையாளங்கள் நிகழ்கின்றன" : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரு இயேசு சபையாளரின் உண்மையான பலம் தொடக்கத்திலிருந்தே அவரின் சொந்த பலவீனம் பற்றி விழிப்புணர்வு கொண்டிருப்பதுதான். காரணம், நமக்கு வலிமை தருபவர் இறைவன் மட்டுமே என்று கனடா திருத்தூதுப் பயணத்தில் அந்நாட்டின் இயேசு சபைப் பணியாளர்களுடன் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 29, வெள்ளியன்று, கனடாவின் கியூபெக் நகரில் அந்நாட்டு இயேசு சபைப் பணியாளர்களுடன் கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பணியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

ஒப்புரவு மற்றும் நல்லிணக்கம் குறித்த இந்தத் தவத் திருப்பயணம் உங்களின் இதயத்திற்கு நிறைவளித்துள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்டு ஆயர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திறம்பட அனைத்தையும் செய்து முடித்திருக்கிறார்கள் என்றும், அதேவேளையில், பூர்வீக இன மக்களும் உண்மையிலேயே, இந்தப் பிரச்சனையை கையாள்வதில் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள் என்றும், இவர்களின் கூட்டு முயற்சியால்தான் இத்தவப் திருப்பயணம் தனக்கு நிறைவளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், திருஅவை ஒன்றிணைந்து செயல்படும்போது அருளடையாளங்கள் அதிகமாக நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்கே தான் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், விரைவாக நடக்கவேண்டுமானால் தனியாகச் செல்லுங்கள், ஆனால், பாதுகாப்பாக நடக்கவேண்டுமானால் இணைந்து நடத்திடுங்கள் என்ற சொற்றொடரை மேற்கோள்காட்டி, நாம் இணைந்தே நடக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

‘ஒன்றிணைந்து பயணம்’ என்பது அரசியல் கூட்டமோ அல்லது நாடாளுமன்ற முடிவுகளுக்கான குழுவோ அல்ல, இது திருஅவையின் குரலாக ஒலிக்கிறது என்றும், அதில் தூய ஆவியானவரே முற்றுலுமாகச் செயல்படத் தொடங்குகிறார் என்றும் வலியுறுத்த விரும்புவதாக எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியானவர் இல்லை என்றால் பயணிக்கும் திருஅவை என்பதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்

நான் என் சார்பாகவோ அல்லது, ஒரு கருத்தியல் சார்பாகவோ அல்லது ஒரு அமைப்பின் சார்பாகவோ பேசவில்ல, மாறாக, திருஅவை சார்பாகப் பேசுகிறேன். நான் ஒரு ஆயராக இருப்பதால் நான் எனக்காகப் பேசுவதில்லை, திருஅவைக்காகவே பேசுகிறேன் என்று தான் கனடாவின் பூர்வீக இனமக்களிடம் மன்னிப்புக் கேட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

மேலும், உரையாடல், தகவல்தொடர்பு, சட்டம் பற்றிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ், அவற்றின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியதுடன், ஹெய்ட்டி மக்களுடன் தனது நெருக்கத்தை உணர்வதாகவும், தனது நண்பர்களான சில அருள்பணியாளர்கள் வழியாக அதன் நிலைமையை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2022, 14:48