புதன் மறைக்கல்வியுரை: முதுமை, ஞானத்தால் நிறைந்தது
ஐரோப்பியர்கள் கோடை விடுமுறை காலத்தில் இருக்கின்றனர் என்பதை, இந்த ஆகஸ்ட் மாதத்தில், உரோம், மற்றும், வத்திக்கான் பகுதிகளில் காணப்படும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வைத்து கணிக்க முடிகின்றது. ஆகஸ்ட் 24, இப்புதன் உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணியளவில், அதாவது இந்திய-இலங்கை நேரம் பகல் 12.30 மணியளவில் வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறைக்கல்வியுரையைக் கேட்டு, அவரது ஆசிரைப் பெறுவதற்காக திருப்பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் அங்கு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல், இயல் 8, இறைவசனங்கள் 22,23,24 ஆகியவற்றின் அடிப்படையில், முதுமை பற்றிய தன் எண்ணங்களை எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் இத்திருமடலின் இப்பகுதி வாசிக்கப்பட்டது. அதற்குப்பின்னர், திருத்தந்தை தன் பொது மறைக்கல்வியுரையை முதலில் இத்தாலியத்தில் தொடங்கினார்.
இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? (உரோ.8:22-24)
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். புதன் மறைக்கல்வியுரைகளில் இறைவார்த்தையின் ஒளியில் முதுமை பற்றி சிந்தித்துவந்த நாம், இந்த ஆகஸ்ட் மாதத்தின் இந்நாள்களில் நாம் சிறப்பித்த புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு குறித்த சிந்தனைகளோடு, இத்தலைப்பு குறித்த சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். நம் அன்னையின் விண்ணேற்பு, அதாவது அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்துக்குச் சென்றது, அவரது மகன் இயேசுவின் உயிர்ப்பு, மற்றும், உலக முடிவில் நம் உடலும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கை ஆகியவற்றோடு மிக நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது. இயேசு, தம் உயிர்ப்புக்குப்பின், தம் சீடர்களுக்குத் தோன்றினார். அந்நேரத்தில், அவர் தமது திருப்பாடுகள் மற்றும், இறப்பின் அடையாளங்களையும் அவர்களுக்கு காட்டினார். வரவிருக்கும் வாழ்வில், நம் ஒவ்வொருவர் “உடலின்” தனித்துவம், நம் நினைவுகள், அனுபவங்கள், தனிப்பட்ட வரலாறு ஆகியவை நிலைத்திருக்கும் என்பதையும், வாழும் கடவுளின் பிரசன்னத்தில் அவை தோற்றமாற்றம் அடையும் என்பதையும் அவர் வெளிப்படுத்துகிறார். நாமும், நமது உலகமும் மறுபிறப்படையும், மற்றும், இவ்வுலகில் நாம் விதைத்த விதைகள், என்றென்றுமுள்ள கனியைத் தரும் என்பதை, மகிழ்ச்சி மற்றும் நிறைவு ஆகிய உருவங்களோடு, உயிர்ப்பு வாழ்வை நம் ஆண்டவர் விளக்குகிறார். “முதுமை” என்று நாம் அழைக்கின்ற வாழ்வின் காலம், நம் வாழ்வை கடவுளின் கண்கள் வழியாகச் சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு, நம்பிக்கையிலிருந்து பிறக்கும் ஞானத்தில் வளர்வதற்கு ஏற்றதாகும். அதோடு, நம் அன்னை மற்றும், அனைத்துப் புனிதர்களின் ஒன்றிப்பில், விண்ணக மகிமையில் நம் எதிர்நோக்கின் நிறைவை மகிழ்வோடு நோக்குவதற்குரிய சிறப்பான காலமுமாகும். ஞானத்தால் பின்னப்பட்டுள்ள முதுமை, இளைய தலைமுறைகள் மற்றும், சமுதாயம் முழுவதன் வாழ்வை ஒளிர்விக்கின்றது.
இவ்வாறு முதுமை குறித்த தன் புதன் பொது மறைக்கல்வியுரைப் பகுதியை இப்புதனன்று நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனில் ஆறு மாதங்களாக இடம்பெற்றுவரும் போரால் துயருறும் மக்களுக்கு அமைதி கிடைப்பதற்காகச் செபித்தார். போரை, 'அறிவற்றதனம்' என்று குறிப்பிட்ட திருத்தந்தை, சிரியா, ஏமன், மியான்மார் ஆகிய நாடுகளில் இடம்பெறும் போர்களால் துன்புறும் மக்களையும் நினைவுகூர்ந்தார். இறுதியில், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும் அமைதியும் அனைவர் மீதும் பொழியப்பட செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்