திருத்தந்தை பிரான்சிஸ்: போருக்கு எதிரான ஒரே ஆயுதம் மன்னிப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
துன்ப இருளில் கடவுளை நம்பவேண்டும் என்றும், திருத்தந்தை ஐந்தாம் செலஸ்டின் அவர்கள் திருஅவைக்கு விட்டுச்சென்ற போதனைகளை மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நற்செய்தியை எடுத்துரைக்கும் அழகான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 28, வருகிற ஞாயிறன்று மத்திய இத்தாலியிலுள்ள L’Aquila நகரத்திற்கு திருப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, அந்நகரில் பிரசுரமாகும் il centro என்னும் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பயணத்தின் நோக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள திருத்தந்தை, 2009ஆம் ஆண்டில் L’Aquila நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிப்படைந்த மக்களைச் சந்திக்கவும், அந்நகரில் Celestinian Forgiveness என்ற யூபிலி நிகழ்வைத் தொடங்கிவைக்கவும் அந்நகருக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
1294ஆம் ஆண்டில் திருத்தந்தை 5ம் செலஸ்டின் அவர்களால் உருவாக்கப்பட்ட (மன்னிப்பு அறிக்கை) இந்த மன்னிப்பு நிகழ்வு, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதியில் L'Aquila நகரில் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, 2019ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய நிகழ்விலும் குறிக்கப்பட்டுள்ளது.
துன்பமும் வலியும் மறைபொருளே
துன்பமும் வலியும் புரிந்துகொள்ள முடியாத மறைபொருளே எனினும் இத்துன்பங்களின் மூலம் இருளைக் கடந்துவிட்டோம் என்று எண்ணிவிட முடியாது. ஏனெனில் இயேசுவும் இத்தகைய துன்பத்தை தனியாகக் கடந்து வந்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, எல்லாம் நம்மை விட்டுச்சென்றதாக உணரப்பட்ட துன்ப வேளையிலும் கடவுள்மேல் அதிக நம்பிக்கை வைக்க இயேசு நமக்கு கற்றுக்கொடுக்கின்றார் என்று கூறியுள்ளார். மன்னிப்பின் வழியாக அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்குங்கள்
ஆகஸ்ட் 28 வருகிற ஞாயிறன்று L’Aquilaவின் santa maria collemaggio பேராலயத்தின் புனிதக் கதவுகளைத் திறந்து நிறைபேறுபலன் தரும் 728ஆவது செலஸ்டின் மன்னிப்பு யூபிலி நிகழ்வைத் தொடங்கி வைக்க இருக்கின்றார் திருத்தந்தை. திருத்தந்தை 5ஆம் செலஸ்டீனின் பாவமன்னிப்பு போதனையின்படி உண்மையாக மனம்வருந்தி பாவமன்னிப்பு பெற்று ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் மாலை திருவழிபாட்டிலும் மறு நாள் திருவழிபாட்டிலும் பங்குபெறுபவர்கள் நிறைபேறுபலன்களைப் பெறுவர்.
துன்பம், துன்பத்தால் அல்ல மாறாக நன்மையினாலே வெற்றி பெறும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, போரைத் தொடுப்பதைவிட மன்னிப்பதற்கே அதிக மனவலிமை வேண்டும் என்றும் மன்னிப்பின் முதிர்ச்சியிலிருந்து அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும், மன்னிப்பே போருக்கு எதிரான ஆயுதம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்