மரியாவைப் போன்று இறைவார்த்தையின் பெண்களாக இருங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
அன்னை மரியாவைப் போன்று, இறைவார்த்தையின் பெண்களாக இருக்கவும், இறைவார்த்தையில் மீண்டும் கவனம் செலுத்தவும், வரையறையின்றி அன்புகூரும் பெண்களாகச் செயல்படவும், அன்னை மரியாவின் பள்ளியில் பாடம் கற்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கனோசியன் துறவு சபையினரிடம் கேட்டுக்கொண்டார்.
கனோசியன் அருள்சகோதரிகள் என அழைக்கப்படும் பிறரன்பு புதல்வியர் சபையின் பொதுப் பேரவையில் பங்குகொண்டுவரும் 66 பிரதிநிதிகளை ஆகஸ்ட் 26, இவ்வெள்ளி காலை 11 மணியளவில் வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அச்சபையைத் தோற்றுவித்த மதலேன் கனோசா அவர்களின் சான்று வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறு ஊக்கப்படுத்தினார்.
மத்திய வயது, பெரும் பொறுப்புக்களை ஏற்கின்ற காலம், ஆயினும், அக்காலக்கட்டத்தில், இறைவார்த்தையின் பெண்களாக இல்லாமல், கணனி, தொலைபேசி போன்ற பலவற்றின் பெண்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கைவிடுத்த திருத்தந்தை, அன்னை மரியாவின் பள்ளியில் பாடம் கற்கவேண்டும் என்ற அழைப்புக்குச் செவிசாய்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
வரையின்றி அன்புகூரும் சக்தி, நம்மிடமிருந்தோ, நம் முயற்சியாலோ அல்ல, மாறாக, கணக்கின்றி எப்போதும் அன்புகூரும் கடவுளிடமிருந்து கிடைக்கிறது என்றும், தூய ஆவியாருக்கு நம் வாழ்வில் இடம் ஒதுக்கும்போது நம்மால் வரையறையின்றி அன்புகூர முடியும் என்றும், இதுவே புனிதத்துவம் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
புனிதத்துவ வாழ்வுக்குத் தோற்றமாற்றம் அடைய... என்ற தலைப்பில் அப்பொதுப் பேரவை நடைபெற்று வருவது குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த மாற்றம், தனக்குள்ளேயும், இக்கால மறைப்பணிக்காவும் இடம்பெறவேண்டும் என அத்தலைப்பு வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டினார்.
கடவுளுக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்திருந்த மதலேன் கனோசா அவர்கள், ஏழைகளோடு எப்போதும் உடனிருக்க விரும்பினார் என்றும், அவரது சான்று வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, குழு வாழ்வு, செப வாழ்வு ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
கிறிஸ்துவின் பேரன்பே நம்மை ஒன்றுசேர்க்கிறது மற்றும், நம்மைச் செயல்படத் தூண்டுகிறது என்ற புனித பவுலின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, கனோசியன் சபையினர் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி, தன் ஆசிரையும் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்